Wednesday, August 12, 2009

“எதிர்காலத்தை திட்டமிடுங்கள்”: இளைஞர்களுக்கு ரஜினி அறிவுரை ----- Think about future

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி இளைய சமுதாயத்தினர் எப்படி வாழ வேண்டும் என்று ரஜினி கூறிய அறிவுரைகளை அவர் மகள் சவுந்தர்யா வெளியிட்டார். ரஜினி சொன்ன கருத்துக்கள் வருமாறு:-

இளைஞர்கள் பழைய வாழ்க்கையை மறக்கக்கூடாது. அதே நேரம் அதிலேயே வாழவும் கூடாது. உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். அதிலும் வாழாதீர்கள். நிகழ்காலத்தில்தான் வாழ வேண்டும்.

துன்பம், இன்பம் இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு உங்களால் முடிந்த சேவைகளை செய்யுங்கள். முடியாவிட்டால் தொந்தரவு செய்யாதீர்கள். கூடுமான வரை சுயநலமில்லாமல் இருங்கள்.

இவ்வாறு ரஜினி கூறியதாக சவுந்தர்யா தெரிவித்தார். மேலும் சவுந்தர்யா கூறியதாவது:-

எனது தந்தை ரஜினியின் கருத்துக்களை என் மனதில் வைத்துள்ளேன். இளைஞர்கள் நமது கலாச்சாரத்தை மறக்கக்கூடாது. தற்போது மேற்கத்திய கலாச்சாரமும் பரவி வருகிறது. இரண்டில் எதை பின்பற்றலாம் என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது.

இப்போதைய இளைய தலைமுறையினரிடம் குழப்பங்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்கமாட்டேன். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். இட்லி, தோசைக்காரர்கள் என்று நம்மை பற்றி சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை பெருமையாக நினைக்க வேண்டும்.

இளைஞர்களிடம் உண்மை, மூத்தவர்களை மதிக்கும் தன்மை இருக்க வேண்டும். பெரியவர்களின் வழிகாட்டுதல்களை என்றைக்கும் புறக்கணிக்கக் கூடாது. இன்றைய இளைஞர்கள் தான் நாளைய எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள். நாம் தான் எதிர்காலம். வருங்கால உலகை ஆட்சி செய்யப்போகிறவர்களும் இளைஞர்கள்தான்.

இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009