கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் சி.பி.ஐ. அதிகாரி கதை.
முருகன் கோவில் மரத்தில் ஏழைகள், பணக்கஷ்டங்களை தீர்க்க வேண்டி துண்டு சீட்டுகள் எழுதி கட்டிச்செல்கின்றனர். மறுநாள் அவர்கள் வீட்டு வாசல்களில் கடவுள் கந்தசாமி பெயரில் பணப்பைகள் கிடக்கின்றன.
இந்த செய்தி நாடெங்கும் பரவி மக்கள் கூட்டம் கோவிலில் அலைமோதுகிறது. போலீசார் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். டி.ஐ.ஜி. பிரபு உண்மையை கண்டு பிடிக்க வருகிறார்.
இன்னொரு புறம் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு சி.பி.ஐ. அதிகாரி விக்ரம் கறுப்பு பண முதலைகளை வேட்டையாடி கோடி கோடியாய் பணத்தை மீட்கிறார். பாங்கியில் ஆயிரம் கோடி மோசடி செய்து பதுக்கிய ஆஷிஷ் வித்யார்த்தி வீட்டிலும் சோதனை நடத்தி கட்டுகட்டாய் பணம் எடுக்கிறார். இதனால் ஆத்திரமாகும் ஆஷிஸ் மகள் ஸ்ரேயா விக்ரமை பழி வாங்க துடிக்கிறார்.
கறுப்பு பணத்துடன் சொகுசு பஸ்சில் சுற்றும் ராஜ்மோகனையும் விக்ரம் சிக்கவைத்து ஒரு கிராமத்தை தத்தெடுக்க செய்கிறார்.
விக்ரமால் பாத்திக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தந்திரமாக தங்கள் வலையில் விழவைக்கின்றனர். அப்போது கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு கந்தசாமி கடவுள் பெயரில் ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் நபர் விக்ரம் என்ற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. போலீசில் காட்டி கொடுக்காமல் இருக்க தங்களிடம் இருந்து பறித்த பணத்தை திருப்பி தரவேண்டும் என கெடு வைக்கின்றனர். விக்ரம் அதை ஏற்பது போல் நடிக்கிறார். அவர்கள் கூட்டாளிகளுடன் கை கோர்த்து செயல்படுகிறார். அப்போது வெளிநாட்டு பாங்கிகளில் இந்தியர்கள் மேலும் ஆயிரக்கணக்கான கோடி கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பது தெரிய வருகிறது. அவர்களை பிடிக்க காய்நகர்த்துகிறார். அந்த கூட்டத்தின் முக்கிய புள்ளி அலெக்சை கைது செய்து ஆதாரங்களுடன் நிருபிக்க முயற்சிக்கிறார். அப்போது கறுப்பு பண கும்பல் அலெக்சை கொல்கிறது. டி.ஐ.ஜி. பிரபுவும் விக்ரமை அடையாளம் கண்டு கைது செய்ய நெருங்குகிறார். கறுப்பு பண முதலைகளை மக்கள் மன்றத்தில் தோலுரிப்பதும் சட்டத்தின் பிடியில் இருந்து எப்படி தப்புகிறார் என்பதும் கிளைமாக்ஸ்...
ஹாலிவுட் ஸ்டைலை பிரதிபலிக்கும் அதிரடி சண்டை சாகச படம். விதவிதமான கெட்டப்புகளில் அசத்துகிறார் விக்ரம்.
ஏழை பெண் கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு கொடுத்த பணத்தை அபகரிக்கும் மன்சூர் அலிகானை சேவல் கோழி வேஷத்தில் கொக்கரக்கோ என கூவியும் கோழி போல் நடந்தும் அந்தரத்தில் தாவியும் பறந்து துவம்சம் செய்யும் ஆரம்பமே சூப்பர்மேன் ஸ்டைல்.
சோளக்கொல்லையில் அதே ரூபத்தில் கத்தி ஈட்டிகளுடன் பாயும் ரவுடிகளை அந்தரத்தில் பறந்து தாக்கி அழிப்பது “சீட்” நுனியில் உட்கார வைக்கும் சண்டை. அது படமாக்கப்பட்டுள்ள விதம் ஆங்கில படங்களுக்கு சவால் விடுகிறது.
ஐஸ்வர்யாராய் போல் அழகி வேண்டி கோவில் மரத்தில் துண்டு சீட்டு கட்டும் சார்லி கோஷ்டிக்கு பாடம் புகட்ட பெண் வேடமிட்டு நடனமாடி நையபுடைக்கும் சீன்கள் கலகலப்பானவை.
சி.பி.ஐ. அதிகாரி கெட்டப்பில் மிடுக்கு காட்டுகிறார். மெக்சிகோவில் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் வில்லன்களுடன் மோதி அழிக்கும் சண்டைக் காட்சி பிரமிப்பு. ஆக்ஷனில் இன்னொரு சிகரம் தொட்டுள்ளார் விக்ரம்.
ஸ்ரேயா வில்லி காதலி, கவர்ச்சியில் தாராள மயம்... ஆடையிலும் மேக்கப்பிலும் அன்னியமாய் தெரிகிறார்.
பிரபு அமைதியான போலீஸ் அதிகாரியாக பளிச்சிடுகிறார். தேங்காய் கடை தேனப்பனாக வரும் வடிவேலு காமெடி பெரிய பலம். பக்தர்களிடம் பணம் வசூலிக்க கந்தசாமி போல் வேடமிட்டு மன்சூர்அலிகானிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளும் போலீசை வைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பிரபு விசாரணை நடத்தும் போது குளித்து துணி துவைக்கும் சீன்களும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கிருஷ்ணா, ஆஷிஸ் வித்யார்த்தி, அலெக்ஸ் வில்லத்தனங்கள் மிரட்டல்...
வில்லன் கிருஷ்ணாவின் சொகுசு பஸ் ஸ்ரேயாவின் ஆடம்பர படுக்கை அறை பிரமிக்க வைக்கின்றன.
“ஹைடெக்” தரத்தில் ஹாலிவுட்டுக்கு இணையான ஆக்ஷன் படம் கொடுத்துள்ளார் இயக்குனர் சுசிகணேசன். கந்தசாமியாக விக்ரம் செய்யும் தர்மகாரியங்களுக்கு உதவும் சக கூட்டாளிகளின் நெட்வொர்க் வலுவானவை. “கறுப்பு பணம்” என்பது பழைய கருவாக இருந்தாலும் காட்சிகளின் புதுமை விறுவிறுப்பு ஏற்றுகிறது.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. “எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி” பாடல் முணு முணுக்க வைக்கிறது. என்கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.