Friday, September 18, 2009

நினைத்தாலே இனிக்கும் - Movie Review


பிருதிவிராஜும் ஷக்தியும் ஒரே காலேஜ் நண்பர்கள். உள்ளூர் எம்.எல்.ஏ. மகள் பிரியாமணியும் அங்கு படிக்கிறார். சக மாணவன் கார்த்திக்குமாரும் பிருதிவிராஜும் அடிக்கடி மோதுகிறார்கள். நட்பை நேசிக்கும் ஷக்திக்கு அவர்களை சமாதானபடுத்துவதே வேலை.

ஒரு கட்டத்தில் பிருதிவிராஜுக்கும் பிரியாமணிக்கும் காதல் மலர்கிறது. தொடர்ந்து கல்லூரி மாணவர் தேர்தலும் வருகிறது. தலைவர் பதவிக்கு பிருத்திவி நிற்கிறார். அவரை அசிங்கபடுத்த பிருத்தியும் பிரியாணியும் நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓட்டுப்பெட்டிக்குள் போட்டு விடுகிறார் கார்த்திக். விஷயம் தெரிந்து அந்த போட்டோவை எடுக்க முயன்று தோற்கிறார் பிருத்வி. அப்போது எதிர்பாராதவிதமாக ஷக்தி ஜெனரேட்டர் அறையில் இறந்து கிடக்கிறார்.

அடுத்தடுத்து அதிர்ச்சியில் உறையும் பிருத்வி கல்லூரி படிப்பை விட்டு விட்டு வெளியூர் போய் விடுகிறார். பிரியாமணியும் படிப்பை பாதியில் நிறுத்துகிறார்.

ஷக்தியின் எட்டாம் ஆண்டு நிகழ்ச்சிக்கு நண்பர்கள் எல்லோரையும் அதே கல்லூரிக்கு அழைக்கிறார் அவரது தந்தை பாக்யராஜ். வெவ்வேறு ஊர்களில் இருந்து மனைவி குழந்தைகளுடன் நண்பர்கள் அங்கு ஒன்று கூடுகிறார்கள். பிருதிவிராஜ், பிரியாமணி, கார்த்திக்குமாரும் வருகிறார்கள். வந்த திட்டத்தில் பிருத்வியை கழுத்தை இறுக்கி யாரோ கொல்ல முயற்சிக்கின்றனர். கொல்ல வந்தது யார்? பிரியாமணி, பிருத்வி காதல் என்ன ஆனது. ஷக்தி இறந்த மர்மம் போன்ற முடிச்சுகள் அவிழ்வது கிளைமாக்ஸ்.

கல்லூரி வாழ்க்கை, நட்பு, காதல் என கலகலப்பாக படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன், கல்லூரி விடுதியில் நடக்கும் கலாட்டாக்கள் சீண்டல்கள் பெரிசுகளை ஆட்டோகிராப் நினைவுகளாய் தொற்றும் வகை. கோபம் காட்டும் யதார்த்தவாதியாக வருகிறார் பிருத்விராஜ். விடுதி உணவில் கரப்பான்பூச்சியை பார்த்து கல்லூரி முதல்வரிடம் ஆவேசப்படுவது, மாணவர் தேர்தல் நடத்த சொல்லி மாணவர்களை திரட்டி போராடுவது என முன் நிற்கிறார்.

நண்பன் இறப்பு காதல் தோல்வி என துவண்டு ஊரை விட்டு ஓடி பரிதாபபட வைக்கிறார். எல்லோருக்கும் நல்ல நண்பனாக வரும் ஷக்தி நட்பில் அழுத்தம் பதிக்கிறார். அவரது திடீர் மரணம் எதிர்பாராதது. கல்லூரி மாணவி கேரக்டரில் பிரியாமணி ஒட்டவில்லை. நாடகத்தனமாய் வந்து போகிறார். பாடலில் கவர்ச்சி. தனது போஸ்டரில் ஆபாச வார்த்தையை கண்டு பிருத்வி மேல் ஆத்திரப்படுவதும் அவர் பக்கம் தப்பில்லை என்று அறிந்து கலங்கவதும் நிறைவு.

கார்த்திக்குமார் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ஷக்தி மரணம் சாதாரணமானது அல்ல கொலை என்று தெரிவதும் அவரை சுற்றி திரை மறைவில் நகர்த்தப்படும் கதையும் வலுவானவை காட்சிகளை உயிரோட்டமாக தொகுத்து இருந்தால் இன்னும் இனித்திருக்கும்.

மனோபாலா, இளவரசு, அனுஜா அய்யர், விஷ்ணு ஆகியோரும் உள்ளனர். ஷக்தி தந்தையாக பாக்யராஜ் மனதில் நிற்கிறார். விஜய் ஆண்டனி இசையில் அழகாய் பூக்குதே பாடல் இனிய மெலடி.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009