Saturday, August 15, 2009

வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்: குடியரசுத் தலைவர் சுதந்திர தின உரை

நாட்டில் வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக நாம் போரிட வேண்டும் என்று கூறியுள்ள குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், வலிமையான, ஒன்றுபட்ட மற்றும் முன்னேற்றம் காணும் இந்தியாவை நமக்காகவும், நமது வருங்கால சந்ததியினருக்காகவும் நாம் உருவாக்க வேண்டும் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் 63வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். அதன் விபரம்:

நாட்டின் 63வது சுதந்திர தின விழாவை நாம் நாளை கொண்டாடுகிறோம். இதையொட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்
மற்றும் துணை ராணுவப் படையினருக்கும் சிறப்பு நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன். இதேபோல் மத்திய மற்றும் மாநிலங்களில் காவல்துறையினர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

பல தலைவர்களின் தன்னலமற்ற தியாகத்தின் காரணமாக இந்தியா விடுதலையடைந்தது. நமது நாட்டின் தேசிய தலைவர்கள், தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் சுதந்திர போரட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நமது ஆழ்ந்த மரியாதையை தெரிவிக்கும் வகையில் என்னுடன் இணைந்து அஞ்சலி செலுத்த குடிமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

நாடு விடுதலை அடைந்தவுடன் எவ்வித தாமதமுமின்றி நாட்டின் வளர்ச்சிப் பணிகள் தொடங்கியது. நமது கண்ணோட்டம், கொள்கைகள் மற்றும் பொறுப்புகளை நமது நாட்டு தலைவர்களும், மக்களும் தீர்மானிக்கத் தொடங்கினர். ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு மற்றும் நமது கலாச்சார பாரம்பரியம் ஆகியவை நான்கு முக்கிய தூண்களாக விளங்குகின்றன.

இந்த ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவை பொதுத் தேர்தல்களில் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களையும் சென்றடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பகுதியில் ஒரே ஒரு வாக்காளர் மட்டுமே இருந்தாலும்கூட, அவர் தனது வாக்கை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜனநாயகத்திற்கு ஒற்றுமை உணர்வும், ஒவ்வொரு குடிமகனின் கருத்தும் இணைந்திருக்க வேண்டியது அவசியமாகும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. ஜனநாயகமும், இந்தியாவும் பிரிக்க முடியாதவை என்பதை நிரூபிக்கும் வகையில் ஜனநாயகத்தை நாம் முன்னெடுத்து சென்றிருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதற்கான வாய்ப்புகள் கிடைப்பது போல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மூலமாக அவர்களது குரல் ஒலிக்க வேண்டும். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு உறுப்பினரும் சராசரியாக 13 லட்சம் வாக்காளர்களின் பிரதிநிதியாக உள்ளார். இது சில நாடுகளின் மக்கள் தொகையைவிட கூடுதலாகும் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதியின் பொறுப்பு அதிகமாகிறது. மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அவர் பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில் தங்களது உரிமைகள் பற்றி அறிந்திருப்பதால் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் வசிக்கும் மக்களுக்கு வசதிகள் மற்றும் சேவைகள் திறமையான நிர்வாகத்தின் மூலமாக வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடனும் நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி தவறாக பயன்படுத்தப்படும் போது தீங்கு ஏற்படுகிறது. சுகாதாரம், கல்வி, சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது போன்ற பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வகையில் அரசின் நலத்திட்டங்கள் அமைந்துள்ளன. இந்தத் திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த ஆண்டு பருவ மழை இயல்புக்கும் குறைவாக உள்ளதால், வேளாண்மை பாதிக்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளை சந்திக்க நாம் தயாராக வேண்டும். இதனை சமாளிக்க அரசு எல்லா வகையிலும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. எச்1என்1 ப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பை சமாளிக்கவும் அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசின் இந்த முயற்சிகளுக்கு உதவ பொது மக்கள் முன்வர வேண்டும். மற்ற வளர்ச்சிக்கான முயற்சிகளிலும் பொது-தனியார் பங்கேற்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமுதாயக் குழுக்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக அரசின் முயற்சிகளுக்கு உதவ வேண்டும். குடிமக்கள் தங்களது சமூக பொறுப்புகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும்.

நமது நீடித்த ஜனநாயக நடைமுறை மற்றும் நிலையான பொருளாதார முன்னேற்றம் இந்தியாவை உயரமான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க முடிந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான பெரிய உள்நாட்டு சந்தை மற்றும் வலிமை நம்மிடம் உள்ளது. அறிவுசார் பொருளாதாரத்திலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளிலும் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.

எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சந்திப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம். நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு நமது கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை வலுப்படுத்த வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா உயர் தரத்தை எட்ட வேண்டும். இது அறிவுசார் சமுதாயத்தின் சர்வதேச தரத்திற்கான அளவுகோலாக அமைய வேண்டும்.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. இந்த நிலையை நாம் எட்ட முடியும். பழங்காலத்தில் இருந்தே இந்தியா பொருளாதார ரீதியில் சிறந்து விளங்கியதுடன் அதன் வளத்திற்கும் உலகளாவிய அளவில் முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்றுள்ளதை வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவு பணியாற்ற வேண்டும். இதில் நாம் முக்கிய இடம் வகிக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்கேற்க இயலாத நலிந்த மக்களும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகியவை கிடைக்கச் செய்ய வேண்டும். இது அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். இன்றைக்கு மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பள்ளி செல்லாத பெற்றோர்களின் பெண் குழந்தைகள் கல்லூரிகளில் சேருகின்றன. ஒரு தலைமுறைக்குள் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இது. கல்வி அறிவு பெற்றவராக இருப்பதால் கிடைக்கும் பயன்களை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது அனைவருக்கும் கல்வி என்ற நமது இலக்கை அடைய உதவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்.நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகித அளவிற்கு உள்ள பெண்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் வகையில், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் அவர்கள் சக்தி படைத்தவர்களாக மாற, அதற்கான தேசிய இயக்கம் உதவும்.

முன்னேற்றம் காணும் சமுதாயம், பொருளாதார வல்லரசு மற்றும் ஜனநாயக நாடாக இந்தியா முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனினும், நமது செயல்பாடுகளை கணிப்பதற்கு என்ன அளவுகோல் உள்ளது? உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த மாற்றங்களை சமாளிக்க நாம் என்ன செய்ய போகிறோம்? மதநல்லிணக்கமும், அமைதியும் நமது கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இது எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும். எனவே நாம் முன்னேற்ற பாதையில் செல்லும் போதுகூட இவைதான் நமக்கு பலத்தை அளிப்பதாக அமையும். நல்ல பாரம்பரியத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இடையே இணக்கமான உறவு நிலவ வேண்டும்.

கடந்த பல நூற்றாண்டுகளுக்கு பல்வேறு குழுக்களால் நமது நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் தகுதி நமது நாட்டிற்கு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு நிலைப்பாடுகள் இருந்த போதிலும் ஒன்றுபட்ட சமுதாயமாக நாம் இருந்து வந்துள்ளோம். இந்த ஒற்றுமை நமது தத்துவமாகவே இருந்து வந்துள்ளது. வேறுபாடுகளை அதிகப்படுத்துவதற்கு பதிலாக அவற்றுக்கு தீர்வு காண இது உதவுகிறது.

அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதம் அமைதிக்கு எதிரானதாகும். இது எல்லா மதங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்பதால் இது கண்டிக்கத்தக்கது. அமைதியான சமுதாயம் மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்கும் வகையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

கடந்த 1857-ம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து நாம் போராடி கொண்டிருக்கிறோம். பிரித்தாலும் கொள்கைக்கு எதிராக நாம் போராடியிருக்கிறோம். சுதந்திர போராட்டத்தில் உயர்ந்த கொள்கைகள் அடிப்படையிலேயே நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். மதச்சார்பின்மை அனைத்து மதங்களுக்கும் சம அளவு மரியாதை ஆகியவற்றை நாம் பின்பற்றி வந்துள்ளோம். இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் என்று எந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் எனது சகோதர, சகோதரிகளான அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்.

முன்னேற்றம் ஏற்பட சமூக நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. பல்வேறு நிறங்களையும், வாசனைகளையும் கொண்டுள்ள மலர்களை கோர்க்கும் நூலாக அது உள்ளது. மனிதர்களாக நாம் பிளவுபடாமல் ஒன்றுபட்டு இருப்பதை நாம் நிரூபிக்க வேண்டும். வன்முறை மற்றும் பிரிவினை வாதத்திற்கு எதிராக நாம் போரிட வேண்டும். அவநம்பிக்கை, வெறுப்பு போன்ற உணர்வுகள் இருந்தால் நாம் முன்னேற்றம் காண முடியாது. எனவே, நாம் வலிமையான, ஒன்றுபட்ட மற்றும் முன்னேற்றம் காணும் இந்தியாவை நமக்காகவும் நமது வருங்கால சந்ததியினருக்காகவும் உருவாக்க வேண்டும்.

குடிமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009