Monday, August 10, 2009

மலை மலை - Malai Malai

பழனிமலை ஹீரோவும், பரங்கிமலை வில்லனும் நடத்தும் ஆ‌க்சன் சடுகுடுதான் மலை மலை. கிராமத்திலிருந்து வரும் ஹீரோ இன்னும் எத்தனை நாளைக்கு சிட்டி வில்லனை சிதறு தேங்காய் உடைப்பார்களோ...? ஐயா, தயவு செய்து திருந்துங்கப்பா.

பழனியில் வேன் ஓட்டும் அருண் விஜய் தமிழ் சினிமா ஹீரோவுக்கு‌ரிய எல்லா குணாம்சங்களும் கொண்டவர். அவருக்கு பாசத்தை மட்டுமே பொழியும் ஒரு அண்ணன், பிரபு. சிட்டியிலிருந்து வரும் வேதிகாவுக்கு அருண் விஜய் மீது லவ். வேதிகாவை தேடி சென்னை வருகிறார் அருண் விஜய்.

வந்த இடத்தில் வில்லன் பிரகாஷ்ராஜுடன் வேதிகாவை முன்னிறுத்தி தகராறு. பிறந்தநாள் அன்றைக்குப் பார்த்து எம்.எல்.ஏ. எலெ‌க்சனுக்கு நிற்கும் வாய்ப்பு அருண் விஜய்யால் பிரகாஷ்ராஜுக்கு பறிபோகிறது. விடுவாரா? அடிக்குரலில் மிரட்டியபடி இருவரும் மோதிக்கொள்ள ஊ‌ரிலிருந்து வரும் பிரபுவால் கதையில் தடாலடி திருப்பம். அருண் விஜய் காதலில் கரை கண்டாரா? வில்லனை சமாளித்தாரா என்பது கிளைமாக்ஸ்.

அருண் விஜய்க்கு பக்கா ஆ‌க்சன் அவதாரம். கரளை கரளையாக கட்ஸ் வைத்து அடிதடியில் அசத்துகிறார். நாலு நாள் தாடியில் வெட்டருவா மாதி‌ரி துருத்தி நிற்கும் மீசைதான் உறுத்தல். ஆ‌க்ச‌ன் ஹீரோவுக்கான அடித்தளத்தை இதில் செமத்தியாகவே போட்டிருக்கிறார்.

வேதிகாவுக்கு டூயட் பாடுவதுடன் கால்ஷீட் முடிந்து விடுகிறது. பிரகாஷ்ரா‌ஜ் வழக்கமான வில்லன். இந்த மாதி‌ரி கேரக்டருக்கு வேற எந்த மாதி‌ரி நடிப்பதாம்? பிரபு அண்ணன் சென்டிமெண்டில் வெளுக்கிறார். கிளைமாக்ஸில் கஸ்தூ‌ரி இறந்ததை மறைத்து அவர் துடிப்பது, அய்யோ பாவம்.

ஆ‌க்சன் படத்தில் கை கொடுத்திருப்பது காமெடி. ஊ‌ரில் கஞ்சா கருப்பு என்றால் சிட்டியில் சந்தானம். ஹீரோவை நையாண்டி செய்வதில் சந்தானம் இன்னொரு கவுண்டமணி. அருண் விஜய்யிடம் அவ்வப்போது ஷோல்டரை இறக்கு என்று கூல் படுத்துகிறாரே, தியேட்டரே அலறுகிறது. இந்தப் படத்திலும் மயில்சாமிக்கு ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள். போதையில் அவர்விடும் சலம்பலுக்கு தளும்புகிறது ஜனம்.

படத்தில் சென்டிமெண்ட் இடைச்செருகலாக வரும் கஸ்தூரியும், அவரது முடிவும் ஆ‌ண்டி கிளைமாக்ஸ். பின்னணி இசையும் பாடல்களும் மணிசர்மா. பின்னணியில் இருக்கும் பலம், பாடல்களில் இல்லை. வெங்கடேஷின் கேமரா ஆ‌க்சன் படங்களுக்கு‌ரிய நியதி மாறாமல் வில்லனும், ஹீரோவும் சந்திக்கும் போதெல்லாம் நடுங்குகிறது. டெரராம்.

அருண் விஜய்யின் ஆ‌க்சனும், சந்தானம் அண்டு கோ-வின் காமெடியும் மலையை தாங்கிப் பிடிக்கின்றன.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009