Wednesday, October 7, 2009

பி.டி.உஷா கண்ணீர் விசாரணைக்கு உத்தரவு

போபால்: போபாலில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், உரிய வசதிகள் வழங்கப்படாமல் தன்னை அவமானப்படுத்தியதாக தடகள வீராங்கனை பி.டி.உஷா கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 1986 ம் ஆண்டு சியோலில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கம் வென்று அசத்தியவர் தடகள வீராங்கனை பி.டி.உஷா. ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக உள்ளார். இவர், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்கும் 49 வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளராக சென்றார். இவருக்கு இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தனி அறை அளிக்கப்படவில்லை. பலருடன் சேர்ந்து தங்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர், அதிகாரிகளிடம் தெரிவித்த போதும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை.


இதனால் வெறுப்படைந்த பி.டி.உஷா, நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய அளவிலான போட்டிகளின் போது, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவது இல்லை. அவமானப்படுத்தும் விதமாக நிர்வாகிகள் நடந்து கொள்கின்றனர். போபாலில் எனக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதுகிறேன். எனக்கே இப்படி நடக்கிறது என்றால், மற்றவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். இவ்வாறு நடப்பதால் தான், சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை அள்ளிக் குவிக்க முடியவில்லை. தவிர, இதனடிப்படையில் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு உணர்வை ஏற்படுத்த மறுக்கின்றனர். இவ்வாறு பி.டி.உஷா தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திர பிரதேச தடகள சங்கம், இப்பிரச்னை குறித்து விசாரிக்க, விளையாட்டு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

மன்னிப்பு :
இது குறித்து இந்திய தடகள கூட்டமைப்பின் பொது செயலாளர் லலித் பனோட் கூறுகையில்,"" போட்டி அமைப்பாளர்களுக்கும், பி.டி.உஷாவுக்கும் சரியான முறையில் தகவல் தொடர்பின்மை இல்லை. இதனால் அவருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க காலதாமதமாகி விட்டது. நடந்த சம்பவத்துக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அவர் தற்போது ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார்,'' என்றார்.

Read More...

Monday, October 5, 2009

ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி: தீபாவளிக்கு 3 படங்கள் “ரிலீஸ்” சிறுபட்ஜெட் படங்கள் தள்ளிவைப்பு

புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களை வெளியிடலாம் என்றும் இந்த முறை அமலுக்கு வருகிறது.

இதனால் ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி ஆகிய மூன்றும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களை வாரத்துக்கு இரண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையில் இருந்து பெரிய படங்கள் மட்டும் தீபாவளிக்கு வருகின்றன. சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

“ஆதவன்” படத்தில் சூர்யா, நயன்தாரா முதல் முறையாக ஜோடியாக நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.



தமிழ்நாடு முழுவதும் 250 முதல் 300 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் வரும் “ஹசிலி பிலிலி” பாடல் ஹிட்டாகியுள்ளது. செல்போன்களில் ரிங்டோன் ஆகுவும், இப்பாட்டு ஒலிக்கிறது.

ஆக்ஷன், காமெடி கலந்த குடும்ப பாங்கான படமாக தயாராகியுள்ளது. எல்லா ஏரியாக்களிலும் அதிக தொகைக்கு இப்படம் விலை போய்உள்ளது.

பேராண்மை ஜெயம் ரவியின் மெகா பட்ஜெட் படம். இதில் ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார். “ஹாலிவுட்” ராம்போ பட பாணியில் காட்சிகளை எடுத்துள்ளனர். கேரள காடுகளில் எந்திர துப்பாக்கியுடன் உயரமான மரங்களில் ஜெயம் ரவி ஏறி இறங்கும் காட்சிகள் ஆங்கில நடிகர்களுக்கு இணையாக படமாக்கப்பட்டு உள்ளது.

இதில் தன்சிகா, மகா, வியாஸ்ரீ, சரண்யா, வசுந்தரா என 5 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்கள் என்.சி.சி. மாணவிகள் கேரக்டரில் வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேடத்தில் ஜெயம்ரவி நடிக்கிறார்.

ரோலன்ட் சிக்கிங்கார் என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார். எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். இவர் “இயற்கை” “ஈ” படங்களை டைரக்டு செய்தவர். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

ஜகன்மோகினி நமீதா, நடித்துள்ள படம். பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் இயக்கியுள்ளார். ஏற்கனவே “ஜெயமாலினி” நடித்து வெற்றிகரமாக ஓடிய பழைய ஜகன்மோகினியின் ரீமேக்கே இப்படம். நவீன தொழில் நுட்பத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைத்திருப்பது இதன் சிறப்பு அம்சம். இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் அனுஷ்கா நடித்த அருந்ததி படம் தமிழகமெங்கும் வசூலை வாரிகுவித்தது. இதே போல் இந்த பேய் படமும் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கின்றனர்.

Read More...

நயன்தாரா.... -புலிவால் பிடித்த சேச்சி?

சரியாக பனிரெண்டு மாதங்களுக்கு முன்...

எம்எம்டிஏ காலனியில் மழை வெள்ளம் சூழ்ந்து, வீட்டை விட்டு மக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை. ஒரு குடும்ப தலைவி தனது குழந்தைகளுடன், முதல் மாடியிலேயே கொட்ட கொட்ட விழித்திருக்க, அவரது வீட்டுக்கு கிட்டதட்ட நீந்தியே வந்தார்கள் சிலர். எங்கோ வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நயன்தாரா தங்களுக்கு உத்தரவிட்டதாக கூறி அவர்கள் கொடுத்த அன்பளிப்பில் ஒரு மாதம் வாழ்வதற்கான அத்தனை பொருட்களும் இருந்தன. சம்பந்தப்பட்ட பெண்மணி நயன்தாராவுடைய ஒப்பனையாளரின் மனைவி. எங்கோ இருக்கிற ஒரு குடும்பத் தலைவிக்காக உலகின் எங்கேயோ ஒரு மூலையில் இருந்தபடி கவலைப்பட்ட நயன்தாரா, இன்னொரு குடும்ப தலைவியை கண்கலங்க விட்டிருக்கிறாரே, என்னவொரு கசப்பான முரண்பாடு?



உதிர்ந்த ரோமம், வானளாவிய அதிகாரம் போன்ற சொற்களுக்கு இணையாக இன்று மக்களால் அதிகம் விவாதிக்கப்படுகிற வார்த்தையாகி இருக்கிறது 'அருகதை இல்லை'



ரமலத்தை பார்த்து நயன்தாரா சொன்ன வார்த்தைதான் இது. பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று செய்திகள் வந்தபோதெல்லாம் அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த ரமலத், இரண்டாவது முறையாக வாய் திறந்தபோதுதான் நிலவரம் கலவரமாகிப் போனது. அந்த பேட்டியில் "இனிமேல் என் கணவருடன் நயன்தாராவை சேர்ந்து பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன்" என்று கூறியிருந்தார் ரமலத். அதுமட்டுமல்ல, "எதற்காக இங்கு வந்தாரோ, அந்த வேலையை மட்டும் பார்க்கட்டும்" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த நயன்தாரா சொன்ன வார்த்தைதான் "எனக்கு அட்வைஸ் பண்ண ரமலத்துக்கு அருகதை இல்லை" என்பது!


அதன்பின் இருவரும் மாற்றி மாற்றி மீடியாக்களில் குமுறிக் கொண்டார்கள். இறுதியாக நடக்கப்போவது என்ன? கோடம்பாக்கத்தில் மிக முக்கியமான சிலரை தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டினோம். கிடைத்தவை எல்லாமே அதிர்ச்சி ரகம். இன்னும் சில நாட்களுக்குள்ளாகவோ, அல்லது இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போதோ, நயன்தாராவிடமிருந்து ஒரு அறிக்கை வந்திருக்கக் கூடும். என்னவென்று? "எனக்கும் பிரபுதேவாவுக்கும் இருந்த காதலை, நானே முன் வந்து தியாகம் செய்கிறேன்" என்று. "ஒரு குடும்பத்தை பிரித்த பாவம் எனக்கு வேண்டாம்" என்று அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப் போகிறாராம் நயன்.


"ஆறு மணிக்கு மேலே நான் என்ன செய்யுறேன்னு வேவு பார்க்கிற உரிமை எவனுக்கும் இல்லே" என்று இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த சிலரிடம் நெருப்பை உமிழ்ந்த நயன்தாரா, இப்படி ஒரு திடீர் முடிவெடுத்ததற்கு காரணம்? மிக முக்கியமானவர்கள் அவருக்கு செய்த அட்வைஸ்தானாம். யார் சொல்லியும் கேட்காத நயன், இந்த விவகாரத்தில் இருக்கும் சாதக பாதகங்களை அலசி ஆராய்கிற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன் விளைவுதான் இப்படி ஒரு அறிக்கையை தர முன் வந்ததும்!


அடிப்படையில் நயன்தாரா எப்படி? அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலேயே பேச ஆரம்பித்தோம். வந்து விழுந்த தகவல்கள் அதிர்ச்சியோ அதிர்ச்சி. கலகலப்பானவர். அவரது ஆசை நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். சரியாக சொல்லப் போனால் குடும்ப வாழ்வுக்காக ஏங்குகிறார் நயன்தாரா. சிம்புவுடனான இவரது காதல் நிஜம். அதன் பின் விஷாலுடன் ஏற்பட்ட தீவிர காதலும், முளையிலேயே கருகிப்போனது. தன் முயற்சியில் சற்றும் தளராத இந்த விக்கிரமாதித்தி, வில்லு பட நேரத்தில் விஜயையும் காதலித்தார் என்பதுதான் ஷாக்கான செய்தி. ஆனால், அவரோ இந்த விஷயத்தில் கடுமையான மவுன விரதம் இருக்க, தாங்க முடியாத ஈகோவால்தான் பிரபுதேவாவை காதலிக்க துவங்கினாராம். விஜயை வெறுப்பேற்ற என்று எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை. அதுதான் இப்போது புலிவால் பிடித்த சேச்சியாக்கிவிட்டது நயன்தாராவை என்று சொன்ன அவர்கள், தொடர்ந்து சொல்லும் தகவல்கள்தான் படுபயங்கர ஷாக். "இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் இந்த நேரத்தில் கூட அவர் தெலுங்கு ஹீரோக்களான ரவிதேஜா, ஜுனியர் என்டிஆர் போன்ற ஹீரோக்களுடன் ஊர் சுற்றுவதையும் நள்ளிரவு பார்ட்டிகளையும் நிறுத்தவில்லை" என்கிறார்கள்.


காதல் வேறு, கல்யாணம் வேறு, கலகலப்பு வேறு என்பதுதான் அவரது பாலிஸி. இப்படிப்பட்ட ஒருவர், வெறித்தனமாக காதலிப்பதும், அதே வேகத்தில் அந்த காதலை இழக்க துணிவதும் பெரிய விஷயமில்லை. இந்த விஷயத்தை வெகு சீக்கிரம் பிரபுதேவாவே புரிந்து கொள்வார் என்றார்கள்.


தனது காதல் சுலபத்தில் நிறைவேறும் என்ற நயன்தாராவின் எண்ணத்தையும் சமீப நாட்களில் பொசுக்கி விட்டார் ரமலத். தனது ஒவ்வொரு பேட்டியிலும் மாதர் சங்கங்கள் பார்த்துக் கொள்ளும் என்று அவர் சொன்னது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். அவரது அறிக்கைக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. பல்வேறு மாதர் சங்க பிரதிநிதிகள் ரமலத்தை சந்தித்திருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே நயன்தாராவுக்கு எதிரான தங்கள் வியூகங்களை தெளிவுபடுத்தினார்களாம் ரமலத்திடம். இதுவும் நயன்தாராவின் பின்வாங்கலுக்கு காரணமாக அமையக்கூடும்.


சட்டப்படி தங்கள் திருமணத்தை ரிஜிஸ்தர் செய்யாவிட்டாலும், இந்துமத சட்டப்படி மாலை மாற்றிக் கொண்டாலே கணவன் மனைவியாகவே கருதப்படுவார்கள் என்பதால் ரமலத் சம்மதிக்காமல் பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவே முடியாது. அதனாலும் நயன்தாரா விலகி கொள்ளலாம்.


ஆக ரமலத்தின் வாழ்வில் சனிப்பெயர்ச்சி மட்டுமல்ல, நயன்தாரா பெயர்ச்சியும் மிக முக்கியமானதே!

Read More...

அஜீத் கட்டும் புதிய ஏரோ-டிராம்! - Thala

மதுராந்தகத்திற்கு பக்கத்திலிருக்கிறது மின்னல் சித்தாமூர். கொஞ்ச நாட்களாகவே இங்கே அடிக்கடி மின்னல் அடிக்கிறது. அந்த மின்னல்...? அஜீத்! சென்னையிலிருந்து காரில் பயணித்தால் ஒன்றரை மணிநேர பயணம். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் இங்குள்ள பெரிய மைதானத்திற்கு வந்துவிடுகிறார். ஏன்?



தனது செலவில் இங்கே ஒரு மினி ஏரோ டிராம் கட்டி வருகிறார் தல. (இது அவரது நண்பருக்கு சொந்தமான இடமாம்) கொஞ்சம் பிசகியிருந்தால் பைலட் ஆகியிருப்பார் அஜீத். அந்தளவுக்கு குட்டி விமானங்களை இயக்குவதில் அலாதி பிரியம் அவருக்கு. வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த குட்டி விமானத்தில் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள பீச்சில் விமானம் ஓட்டுவது அவரது பொழுது போக்கு. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமானத்தை தனித்தனியாக பிரித்து வைத்துவிடுவாராம். அதை மீண்டும் பொறுத்த சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும். பொறுமையாக இதை உருவாக்கி ஓட்டுகிற வரைக்கும் கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கவென்றே அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்குமாம்.


தனது விமான ஆசையை ஒருத்தருக்கும் தொல்லை கொடுக்காமல் அனுபவிக்கதான் இந்த மினி ஏரோ டிராம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவரது வீட்டில் இருந்த ஒரே ஒரு விமானம் இப்போது இரண்டாகியிருக்கிறது. (குட்டி போட்டுருச்சா...?) இரண்டு விமானங்களை இரண்டு ரிமோட் உதவியுடன் ஒரே நேரத்தில் இயக்குவதுதான் தலயின் இப்போதைய தலையாய கடமை!

தேவைக்கு அதிகமா பணம் இருந்தா இப்படியெல்லாம்தான் யோசிக்க சொல்லும்...

Read More...

Sunday, October 4, 2009

Chennai yil Bayangaramm ------ Chennai its going to be a fear city ???

சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி, இவரது 13 வயது மகன் சூரஜ் ஆகியோர் கடந்த வாரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அனந்தலட்சுமி அணிந்திருந்த நகைகளும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இக்கொலை தொடர்பாக வேல்முருகன் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இரட்டை கொலை பரபரப்பு அடங்கும் முன்னர் நேற்று ஒரே நாளில் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி நேரு நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 60). இவர் தனது 2 மகன்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். நேற்று மகன்கள் இருவரும் வெளியில் சென்று விட்டனர். மனோன்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.


அப்போது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் மனோன்மணியை அடித்துக் கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொலை நடந்த வீட்டின் மேல் தளத்தில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. அங்கு 4 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நேரத்தில் தான் இந்த துணிகர கொலை சம்பவம் நடந்துள்ளது. டைல்ஸ் பதிப்பதற்காக பெருங்குடியை சேர்ந்த வாலிபர் மனோன் மணியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல குன்றத்தூரை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணும் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் அருகே உள்ள சோமங்கலம் மேட்டூரை சேர்ந்தவர் தேசிகன். இவரது மனைவி சாந்தி. நேற்று மதியம் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த நேரத்தில் 2 பேர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். சாந்தி தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்ற போது பின் தொடர்ந்த 2 வாலிபர்களும் சாந்தியின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் நிலை குலைந்த சாந்தி ரத்த வெள்ளத்தில் பிணமானார். அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் தபபிச் சென்றனர்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் சமீப காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை கொன்று நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

இதனால் வீடுகளில் தனியாக இருப்பதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர். வயதானவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இச்சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் மத்தியில் நிலவும் இந்த பயத்தை போக்கி அவர்கள் நிம்மதியாக வாழபோலீசார் வழிவகுக்க வேண்டும்.

அடுத்தடுத்து நடந்துள்ள இந்த 3 கொலைகளுமே நகைக்காக நடந்த கொலை கள்தான். தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிவருவதும் இது போன்ற கொலைகளுக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

இது போன்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களுக்கு திருட்டு நகைகள் விற்பதும் எளிதான காரியமாகி விடுகிறது. ஏதாவது அடகு கடைகளில் இந்த நகைகைள அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு கிடைத்ததை வாங்கிக் கொண்டு தப்பி விடுகிறார்கள். எனவே கொடுப்பதை கொடுத்து விட்டு நகைகளை அடகு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி யாராவது நகைகளை கொண்டு வந்தால் அவர்கள் பற்றி உடனடியாக தகவல் தர வேண்டும் என்று அடகு கடைக்காரர்கிளடம் அறிவுறுத்தியுள்ளோம்.

அது போன்ற திருட்டு நகைகளை வாங்கும் அடகு கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பகல் நேரங்களில் பாதுகாப்புக்காக காவலாளிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Read More...

கருணாநிதிக்கு விருது ; வெட்கக்கேடு : ஜெ., காட்டமான சாடல்

சென்னை : "தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது, இந்தாண்டு கருணாநிதிக்கே வழங்கப்படுகிறது. விருதை வழங்கும் இடத்தில் உள்ள முதல்வரே, விருதைப் பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டித்துள்ளார்.

அவரது அறிக்கை: பிறரை வற்புறுத்தி, தனக்குப் பாராட்டு விழா எடுக்கச் சொல்வதும், குடும்ப உறுப்பினர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவதும், தனக்குத் தானே விருதுகள் அளித்துக்கொள்வதும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அண்ணாதுரை நூற்றாண்டு விழாவில், அண்ணாதுரை படத்தை விட கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரின் படங்களே அதிகமாக காணப்பட்டன. காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் அண்ணாதுரையின் கொள்கை, பெருமைகள், புகழைப் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியை பற்றிய பேச்சுக்களே அதிகம் இடம்பெற்றன. தி.மு.க., சார்பில் வழங்கப்படும் 2009ம் ஆண்டுக்கான அண்ணாதுரை விருதை, தனக்குத் தானே கருணாநிதி பெற்றுக்கொண்டுள்ளார். தன் பெயரிலான விருதை தனது மகனுக்கு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்பம் தான் தி.மு.க., என்று ஆகிவிட்ட நிலையில், விருதுகளை அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் அளிப்பதில் வியப் பில்லை.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருதும், இந்தாண்டு கருணாநிதிக்கே வழங்கப்படுகிறது. பொதுவாக ஒரு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தும். அந்த வகையில் விருதை வழங்கும் இடத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி, மாநில அரசு வழங்கும் விருதை பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல், உலகத்தில் இதுவரை யாரும் கடைபிடிக்காத நடைமுறை. இதை விட வெட்கக் கேடான செயல் எதுவும் இல்லை. விருது வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை நிரூபித்து இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. கடுமையான மின் வெட்டு, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, உலக சாதனையாளர் விருது...

உள்ளாட்சித் தேர்தலை நடத்தியதற்கு, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கை பார்த்ததற்கு, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப் பட்டதற்கு என பல சாதனைகளை நிகழ்த்தியதற்காக நீதிமன்றங்களிடம் இருந்தே சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார் கருணாநிதி. எனவே, தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விருதைப் பெறாமல் இருப்பது தான் முதல்வர் கருணாநிதிக்கு அழகு. ஆட்சி அதிகாரத்தை, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக பயன்படுத்தும் முதல்வர், நதிநீர் பிரச்னை, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, தமிழக மீனவர்கள் தாக்குதல் ஆகியவற்றில் தன் கவனத்தை செலுத்தி, தமிழர்கள் துயர்துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read More...

மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

மும்பை : "மனைவி, எவ்வளவு கேவலமாக திட்டினாலும் அதை கொடுமையாக நினைத்து விவாகரத்து கோரக்கூடாது' என, மும்பை கோர்ட் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நபர், மும்பை ஐகோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் பி.பி.மஜும்தார் மற்றும் ஆர்.வி.மோரே அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக பணிபுரியும் 33 வயதான நபர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனக்கு திருமணமாகி 20 மாதங்கள் ஆகின்றன. என் மனைவி, என்னை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறாள். என்னுடன் அமர்ந்து சாப்பிட மறுக்கிறாள். காலம் முழுக்க இவளது கொடுமையான பேச்சை கேட்டுக் கொண்டு குடும்பம் நடத்த முடியாது. எனவே, விவாகரத்து அளிக்க வேண்டும்' என்றார். இது குறித்து, அந்த நபரின் இளம் மனைவியிடம் நீதிபதிகள் விசாரித்தனர். "சி.ஏ., படித்துள்ளதாக பொய் சொல்லி நிறைய சீதனங்களுடன் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனியார் நிறுவனத்தில் சாதாரண குமாஸ்தாவாக தான் வேலைப் பார்க்கிறார். இந்த உண்மை தெரிந்ததால் கோபப்பட்டு அவரை திட்டினேன்' என்பதை, மனைவி ஒப்புக் கொண்டார்.

இது குறித்து, நீதிபதிகள் குறிப்பிடுகையில், "ஆரம்பத்தில் இந்த பெண் கணவனுடன் அன்பாகத்தான் பழகியிருக்கிறார். கணவர் சி.ஏ.,படிக்கவில்லை என்பது தெரிந்த பிறகு தான், கோபம் ஏற்பட்டு, திட்டியிருக்கிறார். மனைவி திட்டுவதையெல்லாம் ஒரு கொடுமை என கூறி விவாகரத்து கோருவதை, ஏற்க முடியாது. மனைவியும் குடும்ப வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு சொற்களை பயன்படுத்த வேண்டும்' என கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

Read More...

ஆறுமுகம் (Aarumugam Review)

அண்ணாமலை பார்ட் டூ என்று பெயர் வைத்திருக்கலாம். ர‌ஜினிக்கு தைத்த ‌ஜிப்பாவில் பரத் பாவம், ரொம்ப தொள தொள.

பரத் பரம ஏழை. ரம்யா கிருஷ்ணன் கோடீஸ்வ‌ரி. சொல்லி வைத்த மாதி‌ரி ரம்யா கிருஷ்ணனின் தம்பிக்கும், பரத்துக்கும் இடையில் அப்படியொரு நட்பு. இந்த ஏற்றத் தாழ்வு நட்பு ரம்யாவுக்கு பிடிக்கவில்லை. சதி செய்து நண்பர்களை பி‌ரிக்கிறார். கூடவே பரத்தின் நிலத்தை ஏமாற்றி அபக‌ரிப்பவர் அதில் இருக்கும் பரத்தின் அம்மாவின் கல்லறையையும் இடிக்கப் பார்க்கிறார்.

பொங்கியெழும் பரத், ஒரே பாடலில் கோடீஸ்வரனாகி, ரம்யா கிருஷ்ணனை நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார். ஹீரோவல்லவா... ரம்யாவுக்கு பாவ மன்னிப்பு வழங்கி அவர்கள் இழந்ததை அவர்களுக்கே திருப்பித் தருகிறார். ரம்யா கிருஷ்ணனும் பரத் அம்மாவின் கல்லறையில் மன்னிப்பு கேட்க, சுபம்.

தமிழ் ரசிகர்களின் ஞாபகசக்தியை இத்தனை மட்டமாக எடை போட்ட இயக்குனர் வேறு யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அண்ணாமலையை உட்டாலங்கடி செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. மழையில் இடுப்பு துண்டுடன் ரம்யாவுக்கு பரத் சவால்விடும் காட்சியை கூடவா மாற்றக் கூடாது?

ஒரே பாடலில் ஹீரோ கோடீஸ்வரனாவது, தெருவோரம் இட்லி விற்பவனுக்கு உலக அழகி ரேஞ்சில் காதலி இருப்பது, கடைசி நிமிடத்தில் வில்லி மனம் திருந்துவது... யப்பா, எந்த காலத்துலப்பா இருக்கீங்க?

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்ப்பதற்கு தகுதியான படம். மற்றபடி காலத்தையும், பணத்தையும் விரயம் செய்யாதீர்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009