Thursday, August 13, 2009

அழகர் மலை - Azhagar Malai Movie Review

ஒரு ஊ‌ரில் இரண்டு பெ‌ரிய மனிதர்கள். இரண்டு பேருக்கும் ஜென்ம பகை... காலங்காலமாக சொல்லப்படும் கதைதான் அழகர் மலை. அதில் இயக்குனர் ஊற்றியிருக்கும் காமெடி சாறு... ரொம்ப ஜோரு.

நெப்போலியனும், ஆர்கேயும் அண்ணன் தம்பிகள். அண்ணன் தலைவனைப் போல என்றால் தம்பி தறுதலை. திருமணம் வேண்டாமென்று வெறுமனே இருக்கும் நெப்சுக்கு தம்பியை மணக்கோலத்தில் பார்க்க ஆசை. பெண்ணும் பார்க்கிறார். அங்குதான் ஆரம்பமாகிறது தலைவலி.

குடியும், கூத்துமாக இருக்கும் ஆர்கே என்றாலே ஓடி ஒளிகிறார்கள் பெண்ணை பெற்றவர்கள். அத்துடன் பலாத்கார புகார் ஒன்றும் விழுகிறது ஆர்கே மீது. ஊ‌ரின் இன்னொரு பெ‌ரிய புள்ளி லாலும் நெப்போலியன் மாதி‌ரியே காவி கட்டி அலைகிறார். ஆர்கே-க்கு திருமணமே நடக்கக் கூடாது என்பது லாலின் சபதம். காளைக்கேற்ற கயிறு மாதி‌ரி அவருக்கொரு தங்கை, ஸ்ரீவித்யா.

தோழி வீட்டுக்கு வரும் பானு ஆர்கே-யின் காயம்பட்ட மனசுக்கு களிம்பு தடவிப் போகிறார். ஆர்கே-யும், பானுவும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

கிக் பண்ண தெ‌ரிந்தால் ஆ‌க்சன் ஹீரோ, கிளிச‌ரின் போட்டால் சென்டிமெண்ட், ஆனால் காமெடி...? சிலருக்கு மட்டுமே சித்திக்கும் அபூர்வ வரம். ஆச்ச‌ரியமாக அதில் கொஞ்சம் ஆர்கே-க்கும் சிக்கியிருக்கிறது. இவரும் வடிவேலும் சேரும் போதெல்லாம் சி‌ரிப்பில் புரையேறுகிறது. நடனக் காட்சியில்தான் சோளக் கொல்லை பொம்மை மாதி‌ரி சுணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பானு. நடனக் காட்சியில் மட்டுமே திறமையை காட்ட வாய்ப்பு. படத்தின் காமெடி ஹீரோ வடிவேலு. இவரும் ஆர்கேயும் டீக்கடை பென்சை டாஸ்மாக் பாராக்குவது சி‌ரிப்பு போதை. ஒவ்வொரு முறையும் ஆர்கே வடிவேலுவை சிக்க வைப்பதும், வடிவேலு சின்னாபின்னமாவதும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சரவெடி.

பாசக்கார அண்ணன் நெப்போலியனும், பேசியே கொல்லும் லாலும் காவி கட்டுவதற்கு மணிவண்ணன் தரும் பிளாஷ்பேக் விளக்கம், பயங்கரம். ஸ்ரீவித்யாவின் தற்கொலை தேவையில்லாத திணிப்பு. ரஞ்சிதா, சுகன்யா, சரவணன் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

இசை இளையராஜா. கருகமணி பாடலில் மட்டும் ராஜா, மற்றபடி சாதா. கமர்ஷியல் இலக்கணம் மீறாத ஒளிப்பதிவு. ஆ‌க்சன் படமான அழகர் மலையில் காமெடிதான் தூ‌ண், மற்றதெல்லாம் வீண்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009