Sunday, August 30, 2009

பட விழாக்களை புறக்கணித்த நயன்தாரா, மீரா ஜாஸ்மின் நமீதாவுக்கு நோட்டீஸ்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

படங்களை வியாபாரம் செய்ய தயாரிப்பாளர்கள் டிரெயிலர் வெளியீட்டு விழாக்களையும் ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் பெரும் செலவு செய்து நடத்துகின்றனர். நட்சத்திர ஓட்டல்கள், தியேட்டர்களில் இவ்விழாக்கள் நடைபெறும். இதற்காக ஆடம்பர அழைப்பிதழ்கள் அச்சிட்டும் விநியோகிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி யூனியன் நிர்வாகிகள் இத்தகைய விழாக்களில் பங்கேற்று படத்தை உயர்வாக பாராட்டி பேசுவர். இது அப்படத்தின் விளம்பரத்துக்கும் வியாபாரத்துக்கும் உதவியாக இருக்கும்.

ஆனால் இந்த விழாக்களில் அப்படங்களில் நடித்த கதாநாயகிகள் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. கதாநாயகர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். நடிகைகள் வெளியூர் சூட்டிங், என்றே ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி வராமல் புறக்கணித்து விடுகின்றனர்.

சமீபத்தில் “ஆதவன்” பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சத்யம் தியேட்டரில் நடந்தது. விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் வந்து சூர்யாவையும் படக்குழுவினரையும் பாராட்டி பேசினார்கள். ஆனால் அதில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா வரவில்லை.

“ஆதி நாராயணா” என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. அதில் கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மின் விழாவுக்கு வராமல் புறக்கணித்தார்.

நேற்று நமீதா கதாநாயகியாக நடிக்கும் “அழகான பொண்ணுதான்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் நடந்தது. படத்துக்கு சம்பந்தம் இல்லாத நடிகை குஷ்புவே இவ்விழாவில் மகளுடன் பங்கேற்று படத்தை பாராட்டி பேசினார். தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராமநாராயணன் வெளியீட்டு ஆடியோ சி.டி.யையும் பெற்றுக்கொண்டார்.

படத்தின் டைரக்டர் திரு, தயாரிப்பாளர் கேசவன், கதாநாயகன் புதுமுகம் கார்த்திக், இசையமைப்பா ளர் சுந்தர் சி.பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால் நமீதா வரவில்லை.

இந்த விழாவில்தான் பிரச்சினை வெடித்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சிவசக்தி பாண்டியன், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகைகள் படங்களை விளம்பரப்படுத்தும் இது போன்ற விழாக்களுக்கு வருவதில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இக்கருத்தை குஷ்பு, பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் ஆகியோரும் வரவேற்று பேசினர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி ஆகிய மூன்று சங்க நிர்வாகிகளும் கலந்து பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு, காணப்படும் என்று ராம நாராயணன் தெரிவித்தார்.

விரைவில் இதற்கான கூட்டம் நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நமீதா, “அகம் புறம்” பட விழாவில் பங்கேற்காத அப்படத்தின் கதாநாயகி மீனாட்சி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருக்கும் படவிழாவில் பங்கேற்காததற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

அவர்கள் அனுப்பும் பதில் கடிதத்தை வைத்து நடவடிக்கை இருக்கும். இனிமேல் நடிகைகள் அனைவரும் இதுபோன்ற பட விழாக்களில் பங்கேற்க சுற்றறிக்கைகள் அனுப்பப்பட உள்ளது.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009