Monday, August 31, 2009

காங்கிரசில் சேர திட்டமிட்ட விஜய்க்கு பலமுனை எதிர்ப்பு

சென்னை :விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு மறைமுக எதிர்ப்பும், அவரது படங்களுக்கு வெளிநாட்டில் தமிழர்களால் சிக்கல் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.

நடிகர் விஜய், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலை டில்லியில் சந்தித்து விட்டு திரும்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள், விஜயை வரவேற்றுள்ளதால், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லது ராஜ்யசபா எம்.பி., பதவி அவருக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.விஜய் மீண்டும் ராகுலின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆனால் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி உள்ளது. அடுத்த மாதம் தமிழகம் வரும் ராகுலை சந்திக்கும் போது தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என, காங்கிரஸ் கட்சியில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களின் வாரிசுகள் கணக்கு போட்டு காத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரும் பட்சத்தில், அவரது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கொடுக்கப்படும்.

இதனால், பதவியை எதிர் பார்த்துக் காத்திருக்கும் காங்கிரசார் இப்போதே தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.மத்திய அமைச்சர்கள் சிலரை, விஜயின் அப்பா சந்திரசேகர் சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் வாசன் மூலமாகவே ராகுலை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்வது உறுதியாகி உள்ளது. விஜய் முடிவுக்கு வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் விஜய் மனைவியின் பூர்வீகம் இலங்கை. லண்டன் மற்றும் கனடாவில் அவரின் பெற்றோர்களும், உறவினர்களும் உள்ளனர். இதனால் கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விஜய் ரசிகர்களாக உள்ளனர். இதனால், விஜய் நடித்த படங்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விஜய், காங்கிரசில் சேர்ந்தால் இந்நாடுகளில் அவரது படங்களைப் புறக்கணிப்போம் என்று கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்தக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் விஜய், மக்கள் இயக்கம் துவங்கி அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று புதிய அரசியல் கட்சி துவங்கப் போவதாக செய்திகள் வந்தன. இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகவும், அவருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர்களும் குடிமக்கள் என்பதால், அவர்களும் அரசியலில் பங்கு கொள்ள உரிமை உண்டு. ஆனால் விஜய், காங்கிரசில் சேர முன் வந்தால், அதைத் தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள்.மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது தான் இலங்கையில் வரலாறு காணாத வகையில் இனப்படுகொலை அரங்கேறியது.காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் விஜய் கைகோர்க்க எத்தனித்திருப்பது, இலங் கைத் தமிழர்களுக்கு செய்யக் கூடிய ரெண் டகம். விஜய் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விஜய் படங்கள், நடித்து வெளிவர இருக்கும் புதிய படங்களை உலகளாவிய அளவில் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்' என, கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், விஜய் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009