Wednesday, August 5, 2009

தேசம் தலை நிமிர காலில் விழும் இளைஞர்கள் : தொண்டாமுத்தூர் தேர்தலில்

பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அந்த பாட்டி பதறிப்போனார்,திடீரென தன் காலில் விழுந்த அந்த இளைஞரைப் பார்த்து. ""யாருப்பா நீ? எதுக்கு என்னோட கால்ல விழுற?'' ""பாட்டி! உங்க ஊர்ல தேர்தல் நடக்குதுல்ல, அதுல காசு வாங்காம நீங்க ஓட்டுப் போடணும், அதுக்குத்தான் உங்க கால்ல விழுந்தேன்,'' என்று சொல்லி விட்டு, அவரது பதிலை எதிர்பார்க்காமல் அருகே இருந்த பூக்கடைப் பெண்மணியின் காலில் விழப்போய் விட்டார் அந்த இளைஞர்.

கோவை கணபதி பஸ் ஸ்டாப்பில் நேற்று அரங்கேறிய நிஜக் காட்சி இது. அந்த இளைஞருடன் கூடவே நான்கு இளைஞர்கள், இதேபோல அங்கே வந்த பலரது காலிலும் மாறி மாறி விழுந்த காட்சி, ஒரு நிமிடம் உறைய வைத்தது. விசாரித்த போது, அவர்களின் உன்னதமான நோக்கம் புரிய வந்தது. "சத்தியாகிரகா' இயக்கம்; இதுதான் அந்த இளைஞர்களை இணைத்துள்ள அமைப்பின் பெயர்.

விழுப்புரம் அருகேயுள்ள காரைக்கால்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாஸ்திரி(32) என்பவர் தான், இந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர். மனித உரிமைகள் பாடத்தில் முதுநிலை பட்டம் படித்த இந்த இளைஞர், ஆங்கிலத்தில் பல நாவல்களையும் எழுதியுள்ள எழுத்தாளரும் கூட. கடந்த 2005ல் தான் இந்த அமைப்பை இவர் துவக்கியுள்ளார். வரும் 2015ல் இந்தியா வல்லரசாக வேண்டுமென்பதே இவரது விருப்பம், வேண்டுதல் எல்லாம். அதற்குத் தடையான வன்முறை, லஞ்சம், ஜாதி போன்றவற்றை ஒழிக்க வேண்டுமென்று விரும்பிய இவர், அதற்காக எடுத்த ஆயுதம் தான் காலில் விழும் சத்தியாகிரகம். தேர்தலில்துவங்கும் லஞ்சம் தான், தேசத்தின் எல்லா ஊழலுக்கும் அடிப்படை என்பது இவரது அழுத்தமான வாதம்.

அரசியல்வாதிகள் காலில் விழுவதை விட, ஓட்டுக்கு துட்டு வாங்கும் வாக்காளர் காலில் விழலாம் என்று முடிவெடுத்து, களம் இறங்கினார் சாஸ்திரி. அவரது அகிம்சை வழி பிடித்துப்போன பட்டதாரி இளைஞர்கள் பலரும், அவருக்கு ஆதரவாக கை கோர்த்தனர்; காலில் விழுந்தனர். இப்போது, இவரது அமைப்பில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குச் சென்று, 17 லட்சம் பேர் காலில் விழுந்திருப்பது இந்த இளைஞர்களின் அசாத்தியமான சத்தியாகிரக சாதனை. வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மத்திய சிறைகளுக்குச் சென்று அங்குள்ள கைதிகளின் காலில் விழுந்த போது, சில கைதிகள் பதறிப் போய், "எங்க கால்ல நீங்க விழுற அளவுக்கு நாங்க நல்லவங்க இல்லை... இனிமே நாங்க தப்பு பண்ண மாட்டோம்' என்று உறுதி கூறி மெய் சிலிர்க்க வைத்துள்ளனர்.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, சென்னையில் இவர்கள் நடத்திய "காலில் விழும் சத்தியாகிரகம்' பலரது மனசைக் கரைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த இடைத்தேர்தலிலும் "காலில் விழும் பிரசாரத்தை' இவர்கள் துவக்கியுள்ளனர். முதல் கட்டமாக, தொண்டாமுத்தூரில் இந்தசத்தியாகிரக பிரசாரத்தை நேற்று துவக்கினர். நேற்று கணபதி பஸ் ஸ்டாண்டில் துவங்கிய இவர்களது பயணம், இன்று கிராமங்களை நோக்கிச்
செல்கிறது.ராமகிருஷ்ண சாஸ்திரியுடன் கோவை வந்துள்ள இளைஞர்களில் குரானா ஞானமூர்த்தி(28) எம்.ஏ.,(மானுடவியல்) படித்தவர். சென்னையைச் சேர்ந்த பிரபு(27)எம்.ஏ., பட்டதாரி; சுரேஷ்(34) எம்.பி.ஏ., படிப்பவர். காதலில் விழும் வயதில், தேசத்துக்காக பிறர் காலில் விழும் இந்த இளைஞர்களைப் பார்த்தால், சிரம் தாழ்த்தி கரம் குவிக்கத் தோன்றுகிறது. சாஸ்திரி கூறுகையில், ""நாங்கள் காலில் விழும் மாத்திரத்திலேயே பலர், "நாங்க ஓட்டுக்கு காசு வாங்க மாட்டோம்' என்று சத்தியம் அடித்துச் சொல்கின்றனர். லட்சம் பேர் காலில் விழுவதில் ஆயிரம் பேர் திருந்தினாலும் எங்களுக்கு அது வெற்றி தான்,'' என்றார். இணையற்ற இந்தியர்கள் மட்டுமில்லை; மகத்தான மனிதர்களும் கூட!

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009