Saturday, August 8, 2009

அன்புள்ள ஆவியே - A Lovable Ghost (Short story)

"ஙொய்ய்ய்..." என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார்.
"குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!" என்றான் மட்டி.

அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன.

வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர்.

"குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?" எனக் கேட்டான், மடையன்.

அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், "ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன" என்று புளுகினார்.

உடனே சிஷ்யர்கள், "அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்" என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள்.

"உஸ்ஸ்... சத்தம் போடாதே... ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்" என்று மெல்லக் கூறினான், முட்டாள்.


"குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!" என்று குதித்தான், மூடன்.


"அதைவிட, அதற்குக் 'கிச்சு கிச்சு' மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு.


"சரி...சரி... முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்" என்று கட்டளை இட்டார் குரு.


மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.


மண்டையில நெருப்புப் பட்டதும், "ஐயோ..." என்று கதறினான் மண்டு.


மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது.


சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன.


"குருவே" இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன" என்றான்.


"வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்" என்றான், மண்டு.


"இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்" என்றான் முட்டாள்.


முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர்.


இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன.


"சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?" என்று பரமார்த்தர் கேட்டார்.


"குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. 'மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்' என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி.


"ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!" என்றான் மடையன்.


"குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!" என்றான் மூடன்.


"அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?" என்றான் மண்டு.


"செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!" என்றான் மூடன்.

"பலே மூடா!" என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர்.

அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர்.

''திகு, திகு'' என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.

சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள்.

அப்போதும் ''சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!'' என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!

3 comments:

Anonymous said...

Good Comedy Story ..... Ha Ha Ha

Anonymous said...

Good Comedy Story ..... Ha Ha Ha

Anonymous said...

Good Comedy Story ..... Ha Ha Ha

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009