Saturday, July 11, 2009

ஞாபகங்கள் - Gnabagangal

சினிமா எனும் ஆகிருதி எந்தவொரு மனிதனையும் தன்பால் ஈர்க்கவல்லது. சினிமாவின் மூலம் தனது முகம் அல்லது படைப்பு வெளிவந்தால் அது பெரும்பகுதி மக்களை போய் அடைகிறது என்பதே அதன் காரணம். இதுவரை திரைப்பாடல் ஆசிரியராக இருந்த கவிஞர் பா. விஜய்க்கும் அதுவே நடந்துள்ளது.


ஒரு நடிகன் என்ற பரிமாணத்தில் தனது முகத்தை செல்லுலாய்டில் பதிவு செய்துள்ளார். கவிஞனாகிய தன் களம் சார்ந்த விஷயத்திலிருந்து கதையைத் தேர்ந்தெடுத்து 'ஞாபகங்கள்' மூலம் பதிவு செய்ய முயன்றிருக்கிறார்.

திரைப்பாடலாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வரும் மீராப்பிரியன் என்ற கவிஞனுக்கு ஏற்படும் காதல், லட்சியம், காதல் தோல்வி, போராட்டமே ஞாபகங்களாக திரையில் வருகிறது. காதல் கொடுத்த தோல்வியை தனது வெற்றியின் ஆகுதியாக்கி சாதிக்கப் போகும்போது தான் காதலித்த பெண் கைம்பெண்ணாய்... எதிரில். முடிவு என்ன? என்பதே கிளைமாக்ஸ்.

படத்துக்கு கதையும், கவிதையும் கைகொடுக்கும் என ரொம்ப நம்பியிருக்கிறார் விஜய். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. கவிதை ஓ.கே. கதையும், திரைக்கதையும் அந்தப் பணியிலிருந்து ரொம்பவே விலகியிருக்கிறது. கவிஞர் படமென்பதால் பாடலும், இசையும் தத்தம் கடமைகளை சரியாய் செய்துள்ளன. காட்சி அமைப்புகளும் அருமை.

வசனங்களும், சில உருக்கமான காட்சிகளும் இருந்தும்கூட பல இடங்களில் படம் உணர்வுகளை பதிவு செய்கிறேன் பேர்வழி என்று ஏகத்துக்கு பொறுமை இழக்க வைக்கிறது. நாயகி ஸ்ரீதேவிகா மட்டும் பளிச் பளிச். மற்றபடி நம்ம கவிஞர் பா.விஜய் ஒரு படம் எடுத்துருக்காராம். பரவால்ல தேவல. பார்க்கலாம்பா ரகம்தான் பா.விஜய்யின் - ஞாபகங்கள்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009