முதலாளி, தொழிலாளி விசுவாச கதை. கடைசியில் யாரும் யூகிக்கக் கூடிய டுவிஸ்ட். மலையன், தமிழ் சினிமாவின் மக்கிப் போன ஃபார்முலா.
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை வைத்திருப்பவர் சரத்பாபு. அவரது விசுவாச வேலைக்காரர் கரண். சரத்பாபுக்கும், அதே தொழில் செய்யும் சக்திகுமாருக்கும் தொழில் பகை. சரத்பாபுக்காக சக்திகுமாரை பகைத்துக் கொள்கிறார் கரண்.
இந்நிலையில் சரத்பாபுவின் பட்டாசு குடோனில் விபத்து ஏற்பட்டு பலர் சாகின்றனர். அதில் கரண் மணக்க இருக்கும் ஷம்முவும் ஒருவர். விபத்துக்கு சக்திகுமார்தான் காரணம் எனஅவரை புரட்டியெடுக்கிறார் கரண். ஆனால், விபத்துக்கு அவர் காரணமில்லை. பிறகு யார்? எளிதாக யூகிக்கக் கூடிய திருப்பத்துடன் இறுதியில் பழி வாங்கும் படலம்.
அழுக்கு உடையில் அப்படியே சிவகாசி பட்டாசு தொழிலாளியாக மாறியிருக்கிறார் கரண். நடிக்கிறேன் என்று கொடுத்த காசுக்கு மேல் ஓவர் ஆக்டிங் செய்வதுதான் சகிக்க முடியவில்லை. ஆவேசத்தை குறைங்க பாஸ்.
கிராமத்து வாயாடி ஷம்மு. வெடி விபத்தில் சிக்கி உடம்பு முழுவதும் கறுப்பு மேக்கப்பில் உருக வைக்கிறார். மற்றபடி வழக்கமான ஹீரோயின் வேலை. துரத்தி துரத்தி காதல், டூயட் இத்யாதி...
சரத்பாபுவிடம் முதிர்ச்சியான நடிப்பு. படத்தில் படுத்தாத நடிகரும் இவர் மட்டுமே. மயில்சாமியின் காமெடியில் அவ்வப்போது ரிலாக்ஸ் செய்ய முடிகிறது. பெயருக்கு கஞ்சா கருப்பும் இருக்கிறார்.
ஹீரோவின் விசுவாசமான முதலாளிதான் கருப்பு ஆடு என்பதை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம். அதையே ரிப்பீட் செய்திருப்பது மலையனின் மைனஸ். தேவையேயில்லாமல் உதயதாரா. நர்சாக வரும் இவர் கரண் மீது கண்மூடித்தனமாக காதல் கொள்வதற்கு சொல்லும் காரணம் வேடிக்கை.
தினா இசை. பின்னிணி இசையில் காதை துவம்சம் செய்கிறார். விபத்துக்கு சரத்பாபுதான் காரணம் என்பதை வெளியில் சொல்லாததற்கு கரண் ஒரு காரணம் சொல்கிறாரே... அடிமைத்தனத்தின் உச்சம். இதுதான் இயக்குனர் டச் என்றால் அய்யோ பாவம்.
நமத்துப்போன கதை, மருந்தில்லாத திரைக்கதை.. மலையன், புஸ்வாணம்.


0 comments:
Post a Comment