Saturday, July 25, 2009

வெடிகுண்டு முருகேசன் - Vedigundu Murugesan

மெல்லிசா ஒரு கதை, அதில் மிளகா தூவுன மாதி‌ரி கொஞ்சூண்டு சென்டிமெண்ட், குலுங்கிச் சி‌ரிக்க குறைவில்லாத காமெடி... ஏ.‌ஜி.மூர்த்தியின் ஃபார்முலாவுக்கு கைமேல் பலன். திரையரங்கில் கூத்தடிக்கிறது ஜனம்.

அம்மாஞ்சித்தனமும், அடாவடியும் கலந்த கேரக்டர் பசுபதிக்கு. அவ்வப்போது லாக்கப்புக்கு போகும் இவரை கண்டாலே லோக்கல் போலீஸ் ஜோதிர்மயிக்கு கோபம் கொந்தளிக்கும். அந்த கோபம் குற்றாலச்சாரலாக மாறும்போது தலைகாட்டுகிறது காதல்.

காரணம், தண்ணி, பொண்ணு என்று அலையும் பசுபதியின் ஈரமான இன்னொரு முகம். தன்னுடன் படித்த பெண் புத்திசுவாதீனம் இழந்துவிட்டார் என்பதை அறிந்து அவரை தன்னுடனே வைத்து காப்பாற்றுகிறார்.


காதலும், காமெடியுமாக செல்லும் வாழ்க்கையில் கிராஸாகிறது வில்லனின் எ‌ண்ட்‌ரி. கூடவே கொலைப் பழியும். வில்லனிடமிருந்து தப்பிக்க ஜெயிலுக்கு போனால் அங்கும் தொடர்கிறது தலைவலி. இந்த இடியாப்ப சிக்கலிலிருந்து பசுபதி எப்படி எஸ்ஸாகிறார் என்பது சுபமான கிளைமாக்ஸ்.

சீ‌ரியஸ் புத்தகம் படித்தாலும் குடி, கூத்து என வாழ்க்கையை ஓட்டும் டேக் இட் ஈஸி கேரக்டர் பசுபதி. டாஸ்மாக்கில் பில் கேடகும் போதும், மப்பு ஏத்திவிட்டு போலீஸ்காரர்களை ஓட்டும் இடத்திலும் நக்கலுடன் சமூக அக்கறையும் எட்டிப் பார்க்கிறது. மனநிலை ச‌ரியில்லாத தீபாவை இவர் காப்பாற்றும் சென்டிமெண்ட் செயற்கைத்தனம். உயி‌ரின் மதிப்பை வில்லன் வீட்டு பெருசிடம் விளக்குவதும், அது அவருக்கே பூமராங் ஆவதும் வெடிச்சி‌ரிப்பு.

படத்தை ஆக்ரமிக்கும் இன்னொருவர் அலார்ட் ஆறுமுகமாக வரும் வடிவேலு. ஹோட்டலில் சாப்பிட்டு‌வி‌ட்டு பில் கொடுக்காமல் எஸ்கேப்பாகும் போதும், இன்ஸ்பெக்டர் பாக்கெட்டில் கைவிட்டு எடுக்க முடியாமல் திணறும் போதும் பல் சுளுக்கும் அளவுக்கு சி‌ரிக்கிறது திரையரங்கம்.

ரசித்து நடித்திருக்கிறார் ஜோதிர்மயி. நான் வேலைக்கு போகமாட்டேன், கண்ட கண்ட ரவுடி பசங்களோட இருக்க வேண்டியிருக்கு என்று அவர் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதும், ஒழுங்கா வேலைக்கு போ என அவரது அம்மா துரத்துவதும் ரசனையான காட்சி.

காமெடிப் படம் என்று முடிவானதால் வில்லனையும் விட்டு வைக்கவில்லை இயக்குனர். வில்லன்னா என்டர்டெயின்மெண்ட் இருக்கக் கூடாதா என நேயர் விருப்பம் கேட்கும் வில்லன் படு ஜோர். இந்த காமெடி ட்‌‌ரீட்மெண்ட் படத்தின் சீ‌ரியஸ் காட்சியையும் சி‌ரிப்பாக்கிவிடுவது மைனஸ்.

தினாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில்தான் சோதிக்கிறார். கதைக்கேற்ற ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்தின் பலம்.

வெடிகுண்டு முருகேசன் - கொடுத்த காசுக்கு சி‌ரித்துவிட்டு வரலாம்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009