Wednesday, October 7, 2009

பி.டி.உஷா கண்ணீர் விசாரணைக்கு உத்தரவு

போபால்: போபாலில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், உரிய வசதிகள் வழங்கப்படாமல் தன்னை அவமானப்படுத்தியதாக தடகள வீராங்கனை பி.டி.உஷா கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 1986 ம் ஆண்டு சியோலில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கம் வென்று அசத்தியவர் தடகள வீராங்கனை பி.டி.உஷா. ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக உள்ளார். இவர், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்கும் 49 வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளராக சென்றார். இவருக்கு இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தனி அறை அளிக்கப்படவில்லை. பலருடன் சேர்ந்து தங்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர், அதிகாரிகளிடம் தெரிவித்த போதும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை.


இதனால் வெறுப்படைந்த பி.டி.உஷா, நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய அளவிலான போட்டிகளின் போது, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவது இல்லை. அவமானப்படுத்தும் விதமாக நிர்வாகிகள் நடந்து கொள்கின்றனர். போபாலில் எனக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதுகிறேன். எனக்கே இப்படி நடக்கிறது என்றால், மற்றவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். இவ்வாறு நடப்பதால் தான், சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை அள்ளிக் குவிக்க முடியவில்லை. தவிர, இதனடிப்படையில் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு உணர்வை ஏற்படுத்த மறுக்கின்றனர். இவ்வாறு பி.டி.உஷா தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திர பிரதேச தடகள சங்கம், இப்பிரச்னை குறித்து விசாரிக்க, விளையாட்டு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

மன்னிப்பு :
இது குறித்து இந்திய தடகள கூட்டமைப்பின் பொது செயலாளர் லலித் பனோட் கூறுகையில்,"" போட்டி அமைப்பாளர்களுக்கும், பி.டி.உஷாவுக்கும் சரியான முறையில் தகவல் தொடர்பின்மை இல்லை. இதனால் அவருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க காலதாமதமாகி விட்டது. நடந்த சம்பவத்துக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அவர் தற்போது ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார்,'' என்றார்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009