Sunday, October 4, 2009

மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

மும்பை : "மனைவி, எவ்வளவு கேவலமாக திட்டினாலும் அதை கொடுமையாக நினைத்து விவாகரத்து கோரக்கூடாது' என, மும்பை கோர்ட் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நபர், மும்பை ஐகோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் பி.பி.மஜும்தார் மற்றும் ஆர்.வி.மோரே அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக பணிபுரியும் 33 வயதான நபர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனக்கு திருமணமாகி 20 மாதங்கள் ஆகின்றன. என் மனைவி, என்னை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறாள். என்னுடன் அமர்ந்து சாப்பிட மறுக்கிறாள். காலம் முழுக்க இவளது கொடுமையான பேச்சை கேட்டுக் கொண்டு குடும்பம் நடத்த முடியாது. எனவே, விவாகரத்து அளிக்க வேண்டும்' என்றார். இது குறித்து, அந்த நபரின் இளம் மனைவியிடம் நீதிபதிகள் விசாரித்தனர். "சி.ஏ., படித்துள்ளதாக பொய் சொல்லி நிறைய சீதனங்களுடன் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனியார் நிறுவனத்தில் சாதாரண குமாஸ்தாவாக தான் வேலைப் பார்க்கிறார். இந்த உண்மை தெரிந்ததால் கோபப்பட்டு அவரை திட்டினேன்' என்பதை, மனைவி ஒப்புக் கொண்டார்.

இது குறித்து, நீதிபதிகள் குறிப்பிடுகையில், "ஆரம்பத்தில் இந்த பெண் கணவனுடன் அன்பாகத்தான் பழகியிருக்கிறார். கணவர் சி.ஏ.,படிக்கவில்லை என்பது தெரிந்த பிறகு தான், கோபம் ஏற்பட்டு, திட்டியிருக்கிறார். மனைவி திட்டுவதையெல்லாம் ஒரு கொடுமை என கூறி விவாகரத்து கோருவதை, ஏற்க முடியாது. மனைவியும் குடும்ப வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு சொற்களை பயன்படுத்த வேண்டும்' என கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009