Sunday, October 4, 2009

கருணாநிதிக்கு விருது ; வெட்கக்கேடு : ஜெ., காட்டமான சாடல்

சென்னை : "தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது, இந்தாண்டு கருணாநிதிக்கே வழங்கப்படுகிறது. விருதை வழங்கும் இடத்தில் உள்ள முதல்வரே, விருதைப் பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டித்துள்ளார்.

அவரது அறிக்கை: பிறரை வற்புறுத்தி, தனக்குப் பாராட்டு விழா எடுக்கச் சொல்வதும், குடும்ப உறுப்பினர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவதும், தனக்குத் தானே விருதுகள் அளித்துக்கொள்வதும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அண்ணாதுரை நூற்றாண்டு விழாவில், அண்ணாதுரை படத்தை விட கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரின் படங்களே அதிகமாக காணப்பட்டன. காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் அண்ணாதுரையின் கொள்கை, பெருமைகள், புகழைப் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியை பற்றிய பேச்சுக்களே அதிகம் இடம்பெற்றன. தி.மு.க., சார்பில் வழங்கப்படும் 2009ம் ஆண்டுக்கான அண்ணாதுரை விருதை, தனக்குத் தானே கருணாநிதி பெற்றுக்கொண்டுள்ளார். தன் பெயரிலான விருதை தனது மகனுக்கு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்பம் தான் தி.மு.க., என்று ஆகிவிட்ட நிலையில், விருதுகளை அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் அளிப்பதில் வியப் பில்லை.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருதும், இந்தாண்டு கருணாநிதிக்கே வழங்கப்படுகிறது. பொதுவாக ஒரு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தும். அந்த வகையில் விருதை வழங்கும் இடத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி, மாநில அரசு வழங்கும் விருதை பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல், உலகத்தில் இதுவரை யாரும் கடைபிடிக்காத நடைமுறை. இதை விட வெட்கக் கேடான செயல் எதுவும் இல்லை. விருது வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை நிரூபித்து இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. கடுமையான மின் வெட்டு, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, உலக சாதனையாளர் விருது...

உள்ளாட்சித் தேர்தலை நடத்தியதற்கு, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கை பார்த்ததற்கு, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப் பட்டதற்கு என பல சாதனைகளை நிகழ்த்தியதற்காக நீதிமன்றங்களிடம் இருந்தே சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார் கருணாநிதி. எனவே, தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விருதைப் பெறாமல் இருப்பது தான் முதல்வர் கருணாநிதிக்கு அழகு. ஆட்சி அதிகாரத்தை, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக பயன்படுத்தும் முதல்வர், நதிநீர் பிரச்னை, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, தமிழக மீனவர்கள் தாக்குதல் ஆகியவற்றில் தன் கவனத்தை செலுத்தி, தமிழர்கள் துயர்துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009