Saturday, September 12, 2009

ரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு

எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற காட்சிகள் படமானது.

மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் தான் கண்டுபிடித்த ரோபோவை ரஜினி அறிமுகம் செய்வது போன்ற காட்சியை எடுத்தனர். ரஜினி, ஐஸ்வர்யாராய் பாடல் காட்சி அமெரிக்காவில் படமாக்கப்பட்டது.
தற்போது எந்திரன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் வேலையில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். கிளைமாக்ஸ்சில் ஒரு பகுதி சிறுசேரியில் உள்ள தொழில்பேட்டையில் படமாக்கப்பட்டது. ஓடும் பஸ்சில் அமைக்கப்பட்ட பரிசோதனை கூட அரங்கிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இறுதியாக பிரகாஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து முடிய உள்ளது. இதற்காக அங்கு பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அவற்றை தீயிட்டு எரிக்கப்படுகிறது. அந்த தீயை அணைப்பது போன்ற காட்சிகள் நவீன கேமராக்கள் மூலம் பிரமாண்டமாக படமாக்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், டப்பிங் உள்ளிட்ட இதரபணிகள் நடக்க உள்ளன. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் எந்திரன் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009