Monday, September 7, 2009

கிரிக்கெட் - இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா?

மும்பை : முத்தரப்பு தொடரில் சாதிக்க காத்திருக்கிறது தோனி தலைமையிலான இந்திய அணி. இத்தொடரில் அசத்தும் பட்சத்தில் 11 ஆண்டுகளுக்கு பின் இலங்கை மண்ணில் கோப்பை வென்று வரலாறு படைக்கலாம். இலங்கை செல்லும் இந்திய அணி முத்தரப்பு ஒரு நாள் தொடரில்(செப்., 8-14) பங்கேற்கிறது. இதில் மூன்றாவது அணியாக நியூசிலாந்து கலந்து கொள்கிறது. வரும் 11ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

பொதுவாக இரண்டு அணிகள் பங்கேற்ற தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட அணிகள் மோதும் தொடர்களில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. அதிலும் இலங்கை மண்ணில் நடந்த பல அணிகள் பங்கேற்ற தொடர்களில் பெரிதாக சாதிக்கவில்லை. இங்கு கடைசியாக 1998ல் நடந்த முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி, சிங்கர் கோப்பையை வென்றது. இப்போட்டி யில் சச்சின், சவுரவ் கங்குலி சதம் அடித்து அணிக்கு கைகொடுத்தனர். பின்னர் 2002ல் மழை காரணமாக சாம்பியன்ஸ் டிராபியை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது.

இதற்கு பின் இலங்கையில் நடந்த பல நாடுகள் மோதிய 5 ஒரு நாள் தொடர்களில் இந்தியா பங்கேற்றது. இதில் கோப்பை கைப்பற்ற தவறியது. கடந்த 1998ல் வென்ற சிங்கர் கோப்பைக்கு பின் இந்திய துணை கண்டத்தில் நடந்த பல நாடுகள் மோதிய 12 ஒரு நாள் தொடர்களில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் 2002ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி, வங்கதேசத்தில் 2003ல் நடந்த டி.வி.எஸ்., கோப்பையை முறையே இலங்கை, தென் ஆப்ரிக்காவிடம் பகிர்ந்து கொண்டது. 7 முறை இரண்டாம் இடம் பெற்றது. மூன்று முறை லீக் சுற்றில் வெளியேறியது.

தோனி எழுச்சி: இந்த சோகங்களை கடந்து தோனி தலைமையிலான அணி தற்போது மகத்தான எழுச்சி கண்டுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக திகழ்கிறது. கடந்த 2008ல் இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது. 2009ல் இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டி தொடர்களில் வெற்றிக் கொடி நாட்டியது.

முத்தரப்பு தொடரில் இம்முறை சந்திக்க உள்ள இலங்கை அணியை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் சொந்த மண்ணில் வைத்து இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராகவும் வெற்றி கண்டுள்ளது. எனவே, 1998க்கு பின் இலங்கை மண்ணில் சாதிக்க தோனிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை இளம் நட்சத்திரங்களுடன் சேர்ந்து சச்சின், டிராவிட் போன்ற அனுபவ வீரர்களும் களமிறங்க இருப்பதால், சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் பல அணிகள் பங்கேற்கும் தொடரில் கோப்பை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சமீபத்திய "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சந்தித்த படுதோல்விக்கு பரிகாரம் தேடலாம். தவிர, அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதிக்கவும் முத்தரப்பு தொடர் வெற்றி பெரும் உதவியாக இருக்கும்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009