Thursday, July 2, 2009

மனத்தில் சாந்தியைக் கொண்டு வரும் வழி

முதலில் சாந்தி வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும். அதன்பின் முயன்று பார்க்க வேண்டும், தொடர்ந்து முயல வேண்டும்.

அதற்கான முறைகள் பல உள்ளன. இது ஒரு வழி. நன்றாக உட்கார்ந்து கொள், பின், ஆயிரம் எண்ணங்கள் எண்ணுவதை விட்டுவிட்டு "சாந்தி, சாந்தி, சாந்தி" என்று தொடர்ந்து பாடம் போடு. அமைதியையும் மோனத்தையும் பாவனை செய்து கொள். வரும் எண்ணங்களை ஏறிட்டுப் பார்க்காதே, அவைகளின் கூச்சலுக்குச் செவிகொடுக்காதே.உனக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் ஒருவனை விலக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறாய்? அவன் சொல்லுவதைக் கேட்க மறுத்துவிடுகிறாய், முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு எதையோ பார்க்கிறாய். உனது எண்ணங்களையும் அவ்வாறே நடத்து.


மீண்டும் மீண்டும் உட்கார்ந்து சாந்தி உச்சாடனம் போட வாய்ப்புக்களை உண்டாக்கிக்கொள். உறங்கி எழுந்ததும் முதல் வேலையாக இதைச் செய். அதேப்போல் இரவில் உறங்கப் போகுமுன்னும் செய். இதனால் உனது உடல்நலம் கூட முன்னேற்றமடையும். உணவு கொள்ளச் சில நிமிடங்களுக்கு முன் இதைச் செய். உணவு நன்றாகச் செரிப்பதற்கு இது எவ்வளவு உதவி செய்கிறது என்பதை அறிந்து ஆச்சரியப்படுவாய்.இதை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து செய்து வந்தால் சாந்தி வெளியிலிருந்து உனது மனத்திற்குள் வரத் தேவையிராது. நீ என்ன செய்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் உனது மனத்தில் எப்பொழுதும் சாந்தி இருக்கும்.

ஆனால் இதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.தொடக்கத்தில் இந்தச் சாந்தி மந்திரத்தை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பழகு - மிக எளிய முறையில் செய்.நெருங்கிய நண்பனொருவனை உன்னிடம் வர எப்படிக் கூப்பிடுவாய். சும்மா ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதான் தாமதம், பக்கத்தில் வந்துவிடுவான். அதைப் போலத்தான் சாந்தியை உனது நண்பனாக்கிக் கொண்டு கூப்பிட வேண்டும்.

ந‌ன்‌றி : வைகறை (ஸ்ரீஅர‌‌வி‌ந்த ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009