Tuesday, September 22, 2009

ஈரம் - சினிமா விமர்சனம்


அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் குளியல் அறையில் கார் கம்பெனி என்ஜினீயர் நந்தா மனைவி சிந்து மேனன் இறந்து கிடக்கிறார். அவர் ஜாக்கெட்டில் இருந்து என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்ற கடிதத்தை போலீஸ் கைப்பற்றுகிறது. அக்கடிதத்தை வைத்து வழக்கை முடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இறந்தது தனது கல்லூரி காதலி என உதவி கமிஷனர் ஆதிக்கு தெரிய வருகிறது. வழக்கு விசாரணையை தானே எடுத்து நடத்துகிறார்.

சாவு மர்மத்தை கண்டு பிடிக்க கணவன், பக்கத்து வீட்டுக்காரர்கள் என விசாரணையை தொடர்கிறார். அப்போது எதிர் வீட்டில் வசித்த வயதான பெண் திடீரென சாகிறார். அக்குடியிருப்புக்கு காதலியை தேடி வரும் இளைஞன், வாட்ச்மேன், இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் போன்றோரும் அடுத்தடுத்து இறக்கிறார்கள்.

ஆதிக்கு நடப்பது சாதாரண சாவுகள் அல்ல கொலைகள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. கொலையாளியை தேடுகிறார். அப்போது கொலைகளை செய்வது ஒரு ஆவி என தெரிய உதறல். பேயாக வருவது யார்? எதற்காக பழி வாங்குகிறார் என்பது பிளாஷ் பேக்...

ஆவி கதையை வழக்கமான பாணியில் இல்லாமல் நவீன பாணியில் படமாக்கி சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் அறிவழகன். தண்ணீரில் ஆவி ஊடுருவி பழி தீர்க்கும் யுக்தி வித்தியாசமானது.

பிரமாண்ட அடுக்கு மாடி கட்டிடம் அமைதியான இரவு... அறைக்குள் பிணம்... அவ்வீட்டுக்குள் இருந்து கதவு வழியாக வெளியே பாயும் வெள்ளம் என ஆரம்பமே அமர்க்களமான மிரட்டல், ஒவ்வொரு சாவும் தண்ணீரிலேயே நடப்பது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. தியேட்டர் பாத்ரூமில் ஒருவன் செத்து விழ தண்ணீரில் கால் தடம் மட்டும் பதிய மர்ம உருவம் நடந்து செல்வது குலை நடுக்கம். பல காட்சிகள் மழை, நீர் என ஈரத்தோடு சம்பந்தப்படுத்தி நுணுக்கமாக நகர்த்தியது ஒன்றச் செய்கிறது.

ஆதி மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஓடும் பஸ்சில் சிந்து மேனனை காதல் செய்யும் காட்சிகள் கவிதை...

விசாரணைகளில் போலீசின் விறைப்பு காட்டுகிறார். ஒரு கட்டத்தில் சாவுகளுக்கு காரணம் ஆவி என்று அறிவதும் பேய் மூலமே எதற்காக கொலைகள் நடக்கின்றன. என அவர் தெரிந்து கொள்வதும் விறு விறுப்பானவை.

அன்பான கணவனாக வரும் நந்தா திடீர் என குணம் மாறுவது எதிர்பாராதது. சிந்து மேனன் அழகான காதலியாகவும் மனைவியாகவும் வருகிறார். சாகடிக்கப்படும் போது பரிதாபபட வைக்கிறார்.

காதல் கண்ணன், ஸ்ரீநாத், பாய்ஸ் ராஜன், ராஜசேகர், சரண்யா மோகன், லட்சுமி ராமகிருஷ்ணன் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. கதையிலும் காட்சிகளிலும் ஹாலிவுட் தரம்.

கொலையாளி தெரிந்த பிறகும் காட்சிகள் ஜவ்வாக நீள்வதை குறைத்து இருக்கலாம். தமன் இசையும், மனோஜ் ஒளிப்பதிவும் கைகுலுக்கும் ரகம்.

“ஹைடெக்” திகில் படம்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009