Thursday, September 24, 2009

நடிகர் சங்கத்தில் ஜெய் ஆகாஷ் மீது சுனேனா புகார்

“காதலில் விழுந்தேன்” படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனேனா. தொடர்ந்து “மாசிலாமணி” படமும் அவர் நடித்து ரிலீசானது. தற்போது பரத் ஜோடியாக “திருத்தணி” மற்றும் “கதிர்வேல்”, “யாதுமாகி” படங்களில் நடித்து வருகிறார்.

ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கும் “மதன்” படத்தில் சுனேனா கவர்ச்சியாக நடித்திருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு எற்படுத்தின. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்காக சுனேனா கவர்ச்சி போஸ்களுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு உள்ளன.

இதனால் ஆத்திரமடைந்துள்ளார் சுனேனா. அந்த படத்தில் முழுமையாக நடிக்கவில்லை என்றும் விளம்பரத்துக்காக தனது பெயரை மோசடியாக பயன்படுத்துவதாகவும் ஜெய் ஆகாஷ் மீது சுனேனா நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் ஆகாஷிடம் விசாரணை நடத்த நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மோசடி பற்றி சுனேனா கூறியதாவது:-


நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு 15 வயது. அப்போது இரு தெலுங்கு படத்திலும் “மதன்” என்ற தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானேன்.

ஜெய் ஆகாஷ்தான் என்னிடம் மதன் கதையை சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார். ஒரே ஒரு நாள் மட்டும்தான் படப்பிடிப்புக்கு போனேன். மொத்தம் 16 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த படப்பிடிப்பில் நான் நடித்தது. 8 மணி நேரம் தான் ஒரு பாடல் காட்சியில் பாதிதான் நடித்து இருந்தேன். அதன் பிறகு அந்த படப்பிடிப்பு நடக்கவில்லை. ஜெய் ஆகாஷிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

“காதலில் விழுந்தேன்” படத்துக்காக சென்னை வந்தபோது “மதன்” படம் பற்றி எந்த தகவலும் இல்லை. நான்கு வருடம் ஓடி விட்டது. இப்போது திடீரென்று “மதன்” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அடித்த போஸ்டரில் என் படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு நாள் கூட ஒழுங்காக அந்த படத்தில் நடிக்காத என்னை போஸ்டரில் படம் போட்டு நடித்ததாக விளம்பரப்படுத்துவது மோசடியாகும்.

போஸ்டர்களில் என்னை விளம்பரத்துக்காக பயன்படுத்துகிறார்கள். சுனேனா நடித்த சீன்கள் நிறைய இருக்கும் என்று நம்பி டிக்கெட் எடுத்து வரும் ரசிகர்கள் ஏமாந்து போவார்களே என்ற கவலை எனக்கு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை மீது நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுனேனா கூறினார்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009