Tuesday, October 20, 2009

காதலும்..! - சூர்யநீலன்

மாதவனும், கலாவதியும் ``கேட்லாக்''கை வைத்துக்கொண்டு எந்த மாதிரியான வைரநெக்லஸ் வாங்கலாமென மும்முரமாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தரகர் குரலெழுப்பினார்.

``சார்..., மாதவன் சார்...,''

``வாங்க கல்யாண சுந்தரம்.'' மாதவன் சொன்னதும் தன் கைப்பையுடன் மாதவன் அருகே வந்து அமர்ந்தார் தரகர் கல்யாணசுந்தரம். அமர்ந்த அடுத்த நிமிடமே பையில் உள்ள மணப்பெண் போட்டோக்களை ஒவ்வொன்றாக காட்ட ஆரம்பித்தார்.

மாதவனுக்கும், கலாவதிக்கும் அவர் காட்டியதில் காவ்யா போட்டோ தான் பிடித்திருந்தது.

அவர்கள் காவ்யாவை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் காவ்யாவின் அழகு மட்டுமல்ல, அவளது குடும்ப அந்தஸ்தும்தான். 100 பவுன் நகையும், ஒரு போர்டு காரும் வரதட்சணையாக கொடுப்பார்கள் என தரகர் கூறியது அவர்களை உச்சி குளிர வைத்து உடனே சம்மதம் சொல்ல வைத்துவிட்டது.

வடபழனி சிக்னலில் பல வண்டிகளுக்கு மத்தியில் பளபளக்கும் பல்சர் வண்டியில் பச்சை விளக்கிற்காக காத்திருந்தான் மாதவனின் மகன் ஜெய்ராம். ஜெய்ராமின் இடுப்பை இறுக்கி அணைத்தபடி பின்புறம் இருந்தாள் சுமதி. ஜெய்ராமின் குடும்பத்துடன் ஒப்பிடும்பொழுது சுமதியின் குடும்பம் சாதாரணமானதுதான்.


சிக்னலில் பச்சைவிளக்கு எரிந்தது. அனைத்து வண்டிகளும் புறப்பட்டன. ஜெய்ராம் வண்டியை கியர் போட சுமதியின் அணைப்பு மேலும் இறுகியது.டூவீலரில் இருவரும் ஊர் சுற்றும்பொழுது துப்பட்டாவால் தனது முகத்தை மூடிக்கொள்வாள் சுமதி.

``இப்படி முக்காடு போட்டுகிட்டு பயந்து பயந்து காதலிக்கிறது எவ்வளவு நாளைக்கு ஜெய்ராம்... எப்ப கல்யாணமாகி சுதந்திரமா போகப் போறோம்? ஏதாவது பேசு ஜெய்ராம்?'' என ஜெய்ராமின் காதுகளில் கிசுகிசுத்தவாறே இருந்தாள் சுமதி.

``உனக்கு மட்டுமா, எனக்கும் தான் பயமா இருக்கு. நம்ம வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். நான் செத்தேன்.'' -என பதிலுக்கு தந்தையின் மீதுள்ள பயத்தை காட்டினான் ஜெய்ராம்.

``அப்பறம்... இப்படியே முக்காடு போட்டுகிட்டு சுத்தவேண்டியதுதானா?''

ஜெய்ராமுக்கு சுமதியின் மீது காதல் இருந்தாலும், தனது காதலை தந்தை மாதவனிடம் கூறும் அளவுக்கு தைரியமில்லை. காரணம் பணத்தாசையும், அந்தஸ்து பித்தும் பிடித்த பெற்றோரிடம் தனது காதல் வெற்றியடையுமா என்கின்ற சந்தேகமும், பயமும்தான் காரணம். பேராசையுள்ள பெற்றோர்களை பார்க்கும் பொழுது சில நேரங்களில் ஜெய்ராமுக்கு வெறுப்பும் கோபமும்தான் மிஞ்சும்.

இரவு, வீட்டிற்கு வந்த ஜெய்ராம் நடுஹாலில் கால்களை அகட்டி சோபாவில் ``அப்பா...டா..'' என உட்கார்ந்தான். அருகில் டீபாயில் காவ்யா போட்டோ கண்ணில் பட, அதை எடுத்து ``யார் இது?'' என்ற கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருக்க பெட்ரூமிலிருந்து வெளிவந்தாள் தாய் கலாவதி.

``என்னடா... இவ்வளவு லேட்? எங்க போனே? என்று வழக்கமான கேள்விகளை கேட்டுவிட்டு ``இவ பேரு காவ்யா. இவளைத்தான் உனக்கு செலக்ட் பண்ணிருக்கோம். இவள்தான் நம்ம குடும்பத்துக்கு மருமகளா வரணும். மேலும் இவ நம்ம குடும்பத்துக்கு தகுந்தாற்போல பணக்கார வீட்டுப் பெண்.'' என கலாவதி வரிசையாக கூற ``என்னது! எனக்கு தெரியாம இந்த வேலையெல்லாம் எதுக்கும்மா? எனக்கு இப்போதைக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம்.'' என தயக்கத்துடன் தனது கருத்தை வெளிப்படுத்த...

``டேய், என்னடா'' என தந்தை மாதவன் உள்ளேயிருந்து குரலெழுப்பினார். ஜெய்ராமுக்கு மனபதற்றம் சற்று அதிகமானது.

அப்பா தொடர்ந்தார்...

``நம்ம குடும்ப கவுரவத்துக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த பெண் இவள்தான். இந்த வீட்டுக்கு எவ வரனும்னு எனக்கு தெரியும். இந்த போட்டோவ்ல இருக்கிற காவ்யாவைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கிற''. அதிகார தோரணையில் பேசினார் மாதவன்.

இந்த நேரத்தில் சுமதி பற்றி அப்பாவிடம் கூறலாம் என நினைத்தாலும் பயம் தடுத்தது. மீறி கூறினாலும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்கிற சந்தேகம் அவன் வாயை கட்டிப்போட்டது.

மாதவனும், கலாவதியும் கோபத்துடன் சென்றதும் ஜெய்ராமால் திடமாக முடிவெடுக்க இயலவில்லை. அதேநேரம் காவ்யாவின் போட்டோவை பார்க்காமலும் இருக்க முடியவில்லை. சுண்டிவிட்டால் ரத்தம் வரும் கலரில் உலக அழகி போல் போட்டோவில் காட்சி தந்தாள் காவ்யா. பணத்தோடு அழகு வீடு தேடிவரும்போது விட்டுவிட முடியுமா? அவன் மனதுக்குள் நேற்றைய காதலுக்கும் நாளைய காதலுக்குமாக போராட்டம்.

ஆறு மாதத்திற்கு பிறகு...

பட்டு சட்டை, பட்டு வேஷ்டியுடன் கட்டிலில் அமர்ந்திருந்தான் ஜெய்ராம். அறை முழுவதும் மல்லிகை வாசம். ஜெய்ராமின் மனம் மட்டும் சுமதியை மறக்கவில்லை. அவளுடைய நினைவாகவே அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் பால் கிண்ணத்துடன் உள்ளே வந்தாள் அழகு தேவதை காவ்யா. வந்தவளை வரவேற்று அருகில் அமர வைத்தான்.

அழகான காவ்யாவின் கண்களில் மட்டும் அப்போது கட்டுக்கடங்கா சோகம். அவன் கேட்காமலே ஆரம்பித்தாள்.

``என் மனசுல உள்ளதை நீங்க தப்பா நினைச்சாலும் நான் சொல்லித்தான் ஆகணும். ரெண்டு வருஷமா ஒருத்தரை நான் உயிருக்குயிரா காதலிச்சேன். ஆனா எங்க காதல் கை கூடாம போச்சு. அந்தஸ்து பேதம் எங்க காதல் சிறகை வெட்டிப் போட்டுருச்சு. நீங்க யாரையாவது காதலிச்சிருந்தா அந்த வலி உங்களுக்குப் புரியும். உங்களோட மனம் ஒப்ப எனக்கு கொஞ்ச காலம் ஆகலாம். அதுவரைக்கும்...'' என்றவள், பெட்ஷீட்டை தரைக்கு விரித்து தலையணையை தலைக்கு வைத்து தூங்கத் தொடங்கினாள்.

அதிர்ந்து போனவன், கொட்டக் கொட்ட விழித்தபடி மாமனார் வீட்டில் காலையில் அவனுக்கு போட்ட 7 பவுன் சங்கிலியை இப்படியும் அப்படியுமாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியலுக்கு இன்னும் நேரம் இருந்தது.

***

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009