Sunday, October 18, 2009

அகிம்சை என்னும் வேதம்! (சிறுகதை) - கவுரி ரங்கசாமி

ரயில் நகர ஆரம்பித்தது. எனக்கு எதிரே உட்கார்ந் திருந்த ஒரு பெரியவர், காந்தியின் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். நான் மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். நான் சிரித்தற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? நான் யார் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடையலாம்.
என் பெயர் வேண்டாம்... என் பெயர் உங்களுக்கு அவசியமில்லாதது; ஆனால், நான் யார் என்று சொல்லி விடுகிறேன். நான் ஒரு தீவிரவாதி... என்னைப் பார்த்தால், நான் ஒரு தீவிரவாதி என்று ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். அப்படி ஒரு அப்பாவித்தனமான முகம் எனக்கு. நாளை நான் செய்யப்போகும் காரியம், உலக வரலாற்றில் மறக்க முடியாத இடத்தைப் பிடிக்கப் போகிறது. என் மனதுக்குள் அடங்க மறுக்கும் கோபத்திற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். என்னை விரக்தியின் எல்லைக்குக் கொண்டு போய் தற்கொலைக்குத் தூண்டிய இந்த அரசாங்கத்துக்கு ஒரு அதிர்ச்சி பேரலையை உருவாக்க வேண்டும்.
என்னை பார்த்து புன்னகைத்தார் அந்த பெரியவர். நான் இறுக்கமான முகத்தோடு அவருடைய புன்னகையை அலட்சியப்படுத்தினேன். அவர், என்னோடு பேச முயல, நான் சட்டென்று திரும்பிக் கொண்டேன்.
என் செல்போன் ஒலித்தது. என் தலைமை அழைத்தது. சூட்கேசை பத்திரமாய் வைத்துவிட்டு செல்போனுடன் பாத்ரூம் விரைந்தேன்.
""எங்க இருக்கறே?''
""ரயில்ல... பாத்ரூமுக்குள்ளே...''
""ஓ.கே., நாளைக்கு காரியத்தை கச்சிதமா முடிச்சுடு.''
""ஓ.கே.,''
""வெற்றியோடு திரும்பி வா!''
""வெற்றியோடதான் திரும்புவேன்.''
நாளை நடக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிக்கப் போகிறது. அந்தக் கட்சித் தலைவரோடு சேர்ந்து பல உயிர்களை பலி கொடுக்க இருக்கிறேன். இதையெல்லாம் நான்தான் செய்ய இருக்கிறேன். திரும்பி என் இருக்கையில் வந்து அமர்ந்தபோது அந்த பெரியவரும், ஒரு இளைஞனும் ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். என் சூட்கேசை பார்த்தேன். அதில், வெடிகுண்டு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது.


எனக்கு வேலை கொடுக்காத இந்த நாட்டுக்கு, நான் கொடுக்கும் பரிசு; வேலை வாங்கித்தர என்னிடம் லஞ்சம் கேட்ட அரசியல் கட்சிக்கு நான் கொடுக்கும் பதிலடி. வாழ்க்கையில் மிகப்பெரிய விரக்தி. தற்கொலைக்கு முயன்ற போது தான், இந்த இயக்கத்தைப் பற்றி என் நண்பன் ஒருவன் சொன்னான்; சேர்ந்தேன். என் கோபத்துக்கும், விரக்திக்கும் ஆறுதல் கிடைத்தது.
""தம்பி... நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்... வேலை கிடைக்கலைங்கறதுக்காக அரசாங்கத்தை நாம குறை சொல்றது தப்பு...''
""அப்ப, அரசாங்கத்து மேலே தப்பே இல்லைன்னு சொல்றீங்களா?''
""தப்பு இருக்கலாம்... ஆனா, அரசாங்க வேலையையே ஏன் நம்பி இருக்கணும்? சொந்த தொழில் செஞ்சு பொழைச்சுக்கலாம்... பிழைக்கிறதுக்கு எத்தனையோ வழி இருக்குது தம்பி...''
""இல்ல, சார்... இந்த அரசாங்கத்துக்கு நம்ம மேலே அக்கறை இல்லை.''
சிரித்தார் பெரியவர்.
""தம்பி... அரசாங்கம் அப்படிங்கறது யாரு... நாம தானே...? இந்த நாட்டு மேலே உங்களுக்கு அக்கறை இருக்கா?''
""என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க? இந்த நாட்டுக்காக உயிரை கொடுக்கக் கூட தயாரா இருக்கேன்; ஆனா, இந்த நாடுதான் எனக்கு வேலை கொடுக்க மறுக்குது.''
""இந்த நாட்டு மக்கள் மேலே உங்களுக்கு அக்கறை இருக்கா?''
""கண்டிப்பா சார்... நாடு வேற, மக்கள் வேறன்னு நான் நினைக்கறதில்லை.''
""வெரிகுட்... தம்பி, கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு கிராமத்து ஆள் உங்ககிட்ட ஏதோ கேட்டாரே?''
இளைஞனின் முகம் சட்டென்று மாறியது.
""சார்... அது... அது...'' என்று திணறினான்.
""சொல்லுங்க, தம்பி... உட்கார இடம் கேட்டாரு... கொஞ்சம் அட்ஜஸ் பண்ணினா, அஞ்சு பேர் உட்காரலாம்... இல்லையா?'' வியர்த்துப் போனான் அந்த இளைஞன்.
""இல்ல, சார்... அஞ்சு பேர் உட்கார்ந்து போறது கஷ்டம்...'' சிரித்தார் பெரியவர்.
""நம்ம எதிர் சீட்டை கவனிச்சீங்களா? ஆறு பேர் உட்கார்ந்து இருக்கிறாங்க.'' இளைஞனால் பேச முடியவில்லை.
ச்சே... வார்த்தையால் மடக்கிவிட்டாரே... அந்த இளைஞனும் இருக்கை மேல் வைத்திருந்த தன் சூட்கேசை எடுத்து, அடியில் தள்ளி, நின்று கொண்டிருந்த ஒருவரை அழைத்து இடம் கொடுத்து விட்டானே. முட்டாள்... வார்த்தை ஜாலத்தில் கரைந்து விட்டான். நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். காந்தியம், அகிம்சை என்று சொற்பொழிவாற்றத் துவங்கிவிட்டார் அந்த பெரியவர். ஏற்கனவே என் சீட்டில் ஆறு பேர்... போதாக்குறைக்கு, இந்த சொற்பொழிவு வேறு...


"முட்டாள் கிழவரே... உங்கள் அகிம்சையால் முடியாததை எங்களது தீவிரவாதத்தால் நிகழ்த்திக் காட்டுகிறேன்... பார்த்துக் கொண்டே இரு கிழவா...' வெயிலை சபித்தபடியே நடந்தாள் முத்தம்மாள்.
""யப்பா, என்ன வெயிலு... இந்தப் பாடுபடுத்துது...''
சுள்ளி பொறுக்குவதற்காக பனங்காட்டுக்கு வந்திருந்தாள். சனிக்கிழமை என்பதால் சண்முகத்துக்கு பள்ளிக்கூடம் லீவு. அவன் நான்காம் வகுப்பு படிக்கிறான். போன வருடம் காட்டு வேலைக்குப் போன அவனுடைய அப்பா, பாம்பு கடித்து இறந்து விட்டார். இந்த ஒரு வருடத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்து விட்டாள் முத்தம்மாள். கூலி வேலைக்குப் போய் மகனைக் காப்பாற்றி வருகிறாள். மகன் மட்டும் இல்லையென்றால், அவளும் இந்த உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு, புருஷன் போன இடத்துக்கு போயிருப்பாள். வறுமையான வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது?
""சண்முகா... எங்கயும் போயிடாதே... ஒரே இடத்தில் விளையாடு,'' என்று சண்முகத்தைப் பார்த்து கத்தினான்.
""சரிம்மா...'' என்று ஆலமரத்தடியில் இருந்த மாட்டு வண்டியில் ஏறி விளையாடினான் சண்முகம். சரியான வெயில். சுட்டெரித்தது. காட்டுக்குள் ஒரு ஆளையும் காணவில்லை; இல்லையென்றால், ஆள் நடமாட்டம் இருக்கும். வெயில் என்பதால் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கூட ஆற்றங்கரைப் பக்கம் போயிருப்பர். ஒரு சுமை சுள்ளி சேர்ந்தால் போதும்; சீக்கிரம் வீடு போய்ச் சேர்ந்து விடவேண்டும். சண்முகம், பசியில் இருப்பான். வீட்டிலேயே இருடா என்றால் கேட்க மாட்டேன்ங்கறான். உம்... அவனுக்கு கறிச்சோறு கொடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இன்றைக்கு கால் கிலோ கறிஎடுக்க கொஞ்சம் காசு இருக்கு. சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு போனால் வாய்க்கு ருசியாக சோறாக்கிக் கொடுக்கலாம்.


"உம் பையனுக்கு நல்லா படிப்பு வருது முத்தம்மா... அவனை நல்லா படிக்க வை... நிச்சயம் பெரிய ஆளா வருவான்...' வீடு தேடி வந்து சொல்லிவிட்டுப் போனார் கலா டீச்சர். முத்தம்மாவுக்கு பெருமையாக இருந்தது.
"முடிஞ்ச வரைக்கும் படிக்க வைப்போம்...' என்று நினைத்துக் கொண்டாள். சுள்ளி கொஞ்சம் சேர்ந்து விட்டது.
"இது போதும்... நாளைக்கு பார்க்கலாம்... பையன் பசியில இருப் பான்...' என்றபடி சுள்ளியைக் கட்ட ஆரம்பித்தாள்.
""அய் யோ... அம்மா...!''
சண்முகத்தின் அலறல் கேட்டு திடுக் கிட்டாள். குரல் வந்த திசை நோக்கி ஓடினாள்.
கீழே விழுந்து கிடந்தான் சண்முகம். அவன் மண்டையில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது.
""அய்யோ, சண்முகம்! என்னடா ஆச்சு?''
""அம்மா... அம்மா... வலி தாங்க முடியலே... வண்டியில இருந்து கீழ விழுந்துட்டேன்...''
மாடு கட்ட போட்டிருக்கும் கல்லில் மண்டை அடிபட்டிருந்தது.
""அய்யோ, சாமி... நான் என்ன செய்வேன்...'' பதறினாள் முத்தம்மாள். அவளுக்கு உயிரே போய்விட்ட மாதிரி இருந்தது. பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமென்கிற பதைபதைப்பு. யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என்றால் ஒரு ஆளையும் கண்ணில் காணோம். யாராவது சைக்கிளில் வந்தால், பையனை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம். ஊர் கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. டாக்டரம்மா வீட்டில்தான் இருப்பார்கள். என்ன செய்யறது? சாமி, எம்புள்ளையைக் காப்பாத்து...
சும்மாடுத் துண்டை எடுத்தாள். சண்முகத்தின் தலைக்கு கட்டு போட்டாள்.
அவன் வலி தாங்காமல், "அம்மா... அம்மா...' முனகினான். ""பொறுத்துக்க சாமி... ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்...''
பையனைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.
""அம்மா... வலிக்குதும்மா...''
இட்டேரியைத் தாண்டி விட்டாள்... ரயில் தண்டவாளத்தைத் தாண்டி, கருவேலங்காட்டு வழியாக ஓடினால், கால்மணி நேரத்தில் போய்விடலாம். அவள் ஓட்டத்துக்கு பத்து நிமிஷத்திலேயே போய் விடலாம்...
ரயில் தண்டவாளத்தை தாண்ட கால் வைத்ததும் அதிர்ந்து போனாள் முத்தம்மாள்.
""அடக்கடவுளே... என்ன கொடுமை?''
தண்டவாள இணைப்பில் விரிசல் விட்டிருப்பதைக் கண்டாள்.
""இது ரயில் வர்ற நேரமாச்சே... பத்து, பதினஞ்சு நிமிஷத்தில வந்துடுமே...''
குழம்பி நின்றாள் முத்தம்மாள்.
""அம்மா வலிக்குதும்மா,'' அழுதான் சண்முகம்.
"இப்ப என்ன செய்யிறது? ரயில் வந்தா, பெரிய விபத்து நடக்குமே... நூத்துக்கணக்கான உயிர்களை சுமந்துட்டு வருது. காப்பாத்தணுமே... ஊருக்குள்ள போய் ஆளுங்களை கூப்பிட்டு வர்றதுக்குள்ள ரயில் வந்துடுமே... ரயிலை நிறுத்தணுமே...'
வலியால் சண்முகம் துடிக்க, கலங்கிப் போனாள் முத்தம்மாள்.
"அய்யோ... எம்பையனை காப்பாத்தணுமே...'
செய்வதறியாது திகைத்து நின்றாள்.
மகனைக் காப்பாற்றுவதா? மக்களை காப்பாற்றுவதா? மகனா? மக்களா? ஒரு உயிரா? பல உயிர்களா?
""அம்மா முடியலேம்மா... வலிக்குதும்மா...'' மகன் கதறுவதைப் பார்த்தாள். ஒரு முடிவுக்கு வந்தாள்.
"ஆத்தா... மகமாயி... எம்புள்ளை உம்பொறுப்பு... அவனை நீ காப்பாத்து...' ரயிலை தடுத்து நிறுத்துவது என் பொறுப்பு!' என்று முடிவெடுத்தாள்.
ரயிலை நிறுத்த சிவப்புத் துணி காட்ட வேண்டுமே! சிவப்புத் துணிக்கு எங்கே போவது? சும்மாடுத் துண்டைப் பார்த்தாள். வெள்ளைத் துண்டு மகனின் ரத்தத்தால் நனைந்து சிவப்பாக மாறியிருந்தது. மகனை ஓரமாக படுக்க வைத்து துண்டை எடுத்தாள். முந்தானையை கிழித்து மகனின் தலையில் கட்டினாள். துண்டை ஒரு குச்சியில் கட்டினாள். மனசை இறுக்கமாக்கினாள். ரயிலின் வருகைக்காக காத்திருந்தாள்.


சிறிது நேரத்தில்...
தடக், தடக், தடக்... கூவென்ற அலறலோடு ரயில் வருகையை அறிவித்தது. மகனைப் பார்த்தாள் முத்தம்மாள். மயங்கிப் போயிருந்தான். பொங்கிய அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள். ரயில் கண்ணில் பட்டதும் வேகமாக துணியை அசைத்தாள்.
ஓயாமல் பேசிக் கொண்டே வந்தார் அந்த பெரியவர். எனக்கு எப்போதடா ரயிலை விட்டு இறக்குவோம் என்றாகி விட்டது. இந்த இளைஞன் அவருடைய பேச்சில் ஆர்வமாகிவிட்டான்.
""மனுசன் எப்படி வாழணும்ன்னு வாழ்ந்து காட்டியவர் காந்தி. அவரோட அகிம்சை கொள்கைகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்துமான்னு கேட்கறீங்க... தீவிரவாதம்ங்கற விஷம் இன்னிக்கு உலகம் முழுக்க பரவிடுச்சு. தீவிரவாதம் மக்களுக்கு அமைதியான வாழ்க்கையைத் தராது; மக்களுக்கு அமைதியான வாழ்க்கைக்கு வழி வேணும்னா, அதுக்கு ஒரே வழி... காந்தியோட அகிம்சை வழிதான்.
""அகிம்சைக்கு என்னைக்கும் அழிவே கிடையாது. அது ஒரு அற்புதமான பாதை, அமைதியான வாழ்க்கைக்கு அதுதான் வேதம்.''
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரயில், திடீரென்று பிரேக் போட்டு அதிர்ந்து நின்றது.
""என்ன, ரயில் இப்படி சடன் பிரேக் போட்டு நிற்குது...?''
""ஏன், நடுக்காட்டுக்குள்ள நின்னுடுச்சு?''
ஆள் ஆளுக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.
""எல்லாரும் எங்க ஓடறாங்க...''
நான் குழப்பத்தோடு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.
"ரயில் இஞ்ஜினுக்கு முன்னால என்ன கூட்டம்?''
ஒரு மனிதரை அழைத்து விவரம் கேட்டார் பெரியவர்.
""நம்ம உயிரை எல்லாம் ஒரு கிராமத்து பெண் காப்பாத்தி இருக்கறாங்க... தண்டவாளம் விரிசல் விட்டிருக்கு சார்... அந்த பொம்பளையோட பையன் மண்டையில அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருக்கான்... பையனோட ரத்தம் நனைந்த துண்டை காட்டி ரயிலை நிறுத்தியிருக்காங்க...''

எல்லாரும் அதிர்ந்து போவதைப் பார்த்தேன். அந்த பெரியவர்,
""வாங்க... எல்லாரும் போய் பார்க்கலாம்... அந்த பொண்ணுக்கு நம்மாள ஏதாவது உதவ முடியுமான்னு பார்க்கலாம்...'' என்றார். பெட்டியை விட்டு இறங்க ஆரம்பித்தனர்; நானும் சூட்கேசுடன் இறங்கி அவர்களோடு நடக்க ஆரம்பித்தேன்.
இஞ்ஜினுக்கு முன் கூட்டமாய் பயணிகள்... ஒரு பெண், மகனை மடியில் போட்டு அழுது கொண்டிருந்தாள்.
""அய்யோ... தெய்வமே... எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே... நான் என்ன செய்வேன்... சம்முகா... சம்முகா... என்னைப்பாரு சாமி...''
முதலுதவிப் பெட்டியோடு ஒருத்தர் ஓடி வந்தார்.
""தள்ளுங்க... வழி விடுங்க... டாக்டர் வர்றாரு...'' வேகமாக ஓடி வந்தார் டாக்டர்.
""அம்மா, பயப்படாதம்மா... உன் மகனுக்கு ஒண்ணும் ஆயிடாது...'' சிகிச்சை செய்ய ஆரம்பித்தார்.
""இங்க ஆஸ்பத்திரி இருக்கா? எவ்வளவு தூரம் போகணும்?'' விசாரித்தார் டாக்டர்.
"பையனுக்கு பிளட் நிறைய போயிருக்கு... பிளட் கொடுக்க வேண்டியிருக்கும்... பையனுக்கு என்ன குரூப்புன்னு தெரியலே...''
""எனக்கு ஓ பாசிடிவ் டாக்டர்... யாருக்கு வேணும்னாலும் கொடுக்கலாம். நான் கூட வர்றேன்...'' என்று பெரியவர் சொன்னதும், ஆள் ஆளுக்கு அவரவர் ரத்தப் பிரிவை சொன்னார்கள்.
சற்று தூரத்தில் போய்க்கொண்டிருந்த ஜீப்பை சப்தம் போட்டு நிறுத்தினர். பையனையும், அந்த பெண்ணையும் ஜீப்பில் ஏற்றினர். உடன் அந்த பெரியவரும், இளைஞனும் ஏற, இன்னும் சிலரோடு ஜீப் கிளம்பியது.
""தண்டவாளம் சரியான பின்னாலதான் ரயில் கிளம்பும். எவ்வளவு நேரம் ஆகும்ன்னு தெரியலே...''
எல்லாரும் அந்த பெண்ணைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
எனக்குள் அந்த பெரியவர் சொன்ன வார்த்தைகள் திரும்பத்திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
"மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு ஒரே வழி... காந்தியோட அகிம்சை வழிதான். அகிம்சைக்கு, என்னைக்கும் அழிவே கிடையாது. அது ஒரு அற்புதமான பாதை. அமைதியான வாழ்க்கைக்கு அதுதான் வேதம்...'
ஒரு கிராமத்துப் பெண், தன் மகனின் உயிரை விட மக்களின் உயிரை பெரிதாக நினைத்து காப்பாற்றி இருக்கிறாள்.
நான் படித்தவன்... படித்து என்ன பிரயோசனம்? இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகும்,நான் திருந்தாமல் போனால் நான் மனிதப் பிறவியே இல்லை.
எனக்கு ஒரு தகவல் தேவை. யாரிடம் விசாரிப்பது? தேடினேன்.
டிக்கெட் பரிசோதகர் நின்று கொண்டிருந்தார். அவரை நெருங்கினேன்.
""சார்... இங்க பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் எதாவது இருக்கா?''
அவர் என்னை மேலும், கீழும் பார்த்தபடி சொன்னார்.
""ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு... ஏன் கேட்கறீங்க...''
""சரணடையணும்,'' என்றேன்.
***

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009