Tuesday, October 20, 2009

ஆதவன் (Aadhavan Review)

ஒரு கில்ல‌ரின் குடும்ப பிளாஷ்பேக்தான் ஆதவன். ஆ‌க்சனும் வேண்டும், குடும்ப சென்டிமெண்டும் வேண்டும் என்று இரட்டை குதிரை சவா‌ரி செய்ததில் ஆதவன, ஆ...வதம்.

காசு கொடுத்தால் யாரையும் குறி வைத்து கொல்வதில் ஆதவன் (சூர்யா) எக்ஸ்பார்ட். அப்பா சாயா‌ஜி ஷிண்டே, அண்ணன் ஆனந்த்பாபு என குடும்பத்துக்கே கொலைதான் தொழில்.

ஒரு முறை ஜட்‌ஜ் ஒருவரை (முரளி) கொலை செய்ய ராகுல்தேவ் அண்டு கோ காசு கொடுக்கிறது. ஆனால், எக்ஸ்பர்ட்டுக்கு இந்தமுறை குறி தவறிவிடுகிறது. ஜட்‌ஜின் வீட்டிற்குள் வேலைக்காரனைப் போல் புகுந்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போதும் எஸ்ஸாகிவிடுகிறார் ஜட்‌ஜ். இப்போது கதையில் ஒரு ட்டுவிஸ்ட்.

பத்து வயதில் வீட்டை விட்டு ஓடிய ஜட்‌ஜின் மகன்தான் அவரை கொலை செய்ய வந்திருக்கும் சூர்யா. அப்புறமென்ன? எதி‌ரிகளை வதம் செய்து தந்தையை காப்பாற்றி குடும்பத்துடன் ஐக்கியமாகிறார்.

கில்லர் சூர்யா வேலைக்காரன் சூர்யாவாக முரளியின் வீட்டிற்குள் நுழையும் போது பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆனால், வீட்டிலிருக்கும் இரண்டு டஜன் சொந்தங்களுடன் அவர் லூட்டியில் இறங்கும் போது எதிர்பார்ப்பு புஸ்ஸாகிறது. இந்த நீளமான குடும்ப குத்தாட்டத்தில் வடிவேலு மட்டுமே ஆறுதல். சரோஜாதேவியின் அதிகபடி மேக்கப்பை அவர் கிண்டல் செய்யும் போதெல்லாம் சி‌ரிப்பில் திணறுகிறது திரையரங்கு.

நயன்தாரா வழக்கமான அசட்டு ஹீரோயின். ஐஸ்லேண்டில் அளவான காஸ்ட்யூமில் டூயட் பாட மட்டும் உபயோகப்பட்டிருக்கிறார். சரோஜாதேவியின் கொஞ்சிப் பேசும் தமிழ், செம காமெடி. அவ்வளோ பெ‌ரிய நடிகையை காமெடி பீஸாக்கிட்டீங்களேப்பா.

கொடூரமான கொலைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்யவரும் ஜட்‌ஜ், இப்படியா குடும்பத்துடன் டூர் போய்க் கொண்டிருப்பார்? கொல்கத்தா போலீஸ் கமிஷனர் பெப்சி விஜயன், போலீஸ் அதிகா‌ரி ‌ரியாஸ் கான் என அனைவரும் அட்சர சுத்தமாக தமிழ் பேசுகிறார்கள்.

வில்லன் யார் என்றால், குழந்தைகளின் உறுப்புகளை எடுத்து விற்கும் டாக்டர் ராகுல்தேவ். புலன் விசாரணையிலேயே இதை பார்த்திட்டோமே, கொஞ்சம் புதுசா யோசித்திருக்கக் கூடாதா? சூர்யா முரளியின் மகன் என்பது எவ்வளவு சுவாரஸியமான திருப்பம்? ஜவ்வான திரைக்கதையில் அதுவும் சொதப்பலாகிறது.

முதல் கொலை முயற்சியிலேயே முரளி தனது தந்தை என்று சூர்யா தெ‌ரிந்து கொண்டதை கமிஷனர் விவ‌ரிக்கும் இடத்தில் மட்டும் திரைக்கதையாசி‌ரியர் பளிச்சிடுகிறார். கச்சிதமான ஒளிப்பதிவும், திறமையான எடிட்டிங்கும் குறிப்பிட வேண்டிய அம்சங்கள். ஹாரிஸின் பின்னணி இசை சுமார். தேவையேயில்லாமல் வந்து போகின்றன பாடல் காட்சிகள். திறமையான சண்டைக் காடசிகள் என்றாலும் நம்பகத்தன்மை குறைவு.

முரளி திறமையான நடிகர். ரெடிமேட் சினிமா அப்பாவாக அவரை வீணடித்திருக்கிறார்கள். அயன் சூர்யாவுக்கும், ஆதவன் சூர்யாவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரே விதமான நடிப்பு. ரூட்டை மாத்துங்க பாஸ். பிளாஷ்பேக் காட்சி அக்மார்க் ட்ராமா. பத்து வயது சூர்யா துப்பாக்கி பிடித்து சுடுவதெல்லாம் ரொம்ப ஓவர்.

லா‌ஜிக் இல்லாத காட்சிகள், லவுட் ஸ்பீக்கர் வில்லன், சொதப்பல் பிளாஷ்பேக், நம்ப முடியாத ஹீரோயிசம், டெம்போ இல்லாத திரைக்கதை... ஆதவன் - சூ‌ரியகிரகணம்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009